பிகேஆர்: செம்பனை எண்ணெய் ஏபி அனுமதிகளை வைத்திருப்போர் பட்டியலை வெளியிடுக

வெளிநாடுகளில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கச்சா செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் அனுமதிகள் (ஏபி) கொடுக்கப்பட்டுள்ளவர்களுடைய பட்டியலைப் பகிரங்கமாக வெளியிடுமாறு பிகேஆர் இன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது அந்தப் பட்டியல் அரசாங்க ரகசியமாக இருப்பதால் அதிகார அத்துமீறல் நிகழ்ந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுவதாக அந்தக் கட்சியின் வர்த்தக, முதலீட்டுப் பிரிவின் தலைவர் வோங் சென் கூறினார்.

“இரண்டு நாட்களுக்கு முன்பு  நான் அனைத்துலக மாநாடு ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கு பிரபலமான செம்பனை எண்ணெய் ஆய்வாளர் ஒருவர் அந்த ஏபி அனுமதிகளை வைத்திருக்கின்றவர்கள் யார் என குழுவை (பேச்சாளர்கள்) கேட்டார். அதற்கு அந்தப் பட்டியல் அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.”

“அந்தப் பட்டியல் ஏன் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும் ?  சட்டவிரோதமான எதையாவது அவர்கள் மறைக்கின்றார்களா ?” என அவர் வினவினார்.

அங்கீகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் அனுமதி முறை ஈராயிரத்தாவது (2000ம் ஆண்டு) ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் சுத்திகரிப்பு ஆலைகளை வைத்திருக்கும் மலேசிய நிறுவனங்கள் 23 விழுக்காடு ஏற்றுமதி வரியைச் செலுத்தாமல் செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கு அது அனுமதிக்கிறது.

தீர்வை இல்லாத கச்சா செம்பனை எண்ணெய் ஏற்றுமதி அளவு தற்போது 5.6 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். அது மொத்த தேசிய செம்பனை எண்ணெய் உற்பத்தியில் 30 விழுக்காட்டைப் பிரதிநிதிக்கிறது.

TAGS: