நேற்றிரவு சிறம்பானில் நடந்த ஒரு கூட்டத்தில் இரு பாஸ் உறுப்பினர்கள் காயமுற்றனர். இது அக்கூட்ட்டம் நடந்த இடத்திற்கு எதிரில் மலாய் உரிமைகள் ஆதரவு அமைப்பான பெர்காசா நடத்திய ஓர் எதிர்ப்பு ஆர்பாட்டத்தால் நிகழ்ந்தது.
இது ஒரு ஹரிராயா-செராமா நிகழ்ச்சி. இரவு மணி 9.00 க்கு தொடங்கவிருந்தது. ஆனால் மணி 8.30 க்கு முன்பே 100 க்கு மேற்பட்ட பெர்காசா ஆதரவாளர்கள் கூட்டம் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து 60 மீட்டர் தூரத்தில் கூடி கூச்சல் போட்டுக்கொண்டிருந்தனர்.
முகமட் சாபு தமது பேச்சை சுமார் இரவு மணி 10.15 அளவில் தொடங்குவதற்கு முன்பு எல்லாம் அமைதியாகக் காணப்பட்டது.
“மாட் சாபு ஒரு பொய்யர்”, “மாட் சாபு ஓர் இன சீரழிப்பாளர்” மற்றும் “மாட் சாபு சுதந்திர போராட்டவாதிகளை அவமதிக்கிறார்” என்ற வாசகங்கள் பொரிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்றனர்.
மேடைக்கு அருகில் செல்ல முயன்ற பெர்காசா ஆதரவாளர்களை பாஸ் உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியபோது கற்கலும் தண்ணீர் போத்தல்களும் பறக்க ஆரம்பித்தன.
இரு பாஸ் உறுப்பினர்கள் காயமுற்றனர். ஒருவர் தான் பெர்காசா உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக கூறினர். இன்னொருவர் வீசப்பட்ட கல்லால் தலையில் காயமுற்றார்.
பாஸ் சிறம்பான் துணைத் தலைவர் கஸாலி மாட் சோம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர், இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
“ஒரு பெர்காசா உறுப்பினர் ஒரு மகஜர் அளிக்க விரும்பினார். நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
அவர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டோம்.
“பின்னர் நாங்கள் போலீசாரிடம் தெரிவித்தோம். போலீசார் அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறியபோது அவர்கள் மறுத்ததோடு அவர்களின் பண்பற்ற நடத்தையைக் காட்டினர். போலீசார் கூடுதல் படையினரை அழைத்தபோதுதான் அவர்கள் கலைந்து சென்றனர்.
“எனது ஆதரவாளர்கள் போலீஸ் புகார் செய்வதற்காக ரஹாங் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்”, என்று கஸாலி கூறினார்.
இதனிடையே, நெகிரி செம்பிலான் பெர்காசா செயலாளர் அலியாஸ் முகம்மட், அக்கூட்டத்தினரின் ஆர்ப்பாட்டம் பாஸ் கட்சிக்கு எதிரானதல்ல, அது மாட் சாபுக்கு எதிரானது என்று தொடர்பு கொண்டபோது மலேசியாகினியிடம் கூறினார்.
“அவர் ஏராளமான இராணுவ வீரர்களின் உணர்வைக் காயப்படுத்தி விட்டார்.
“நேற்றிரவு பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் மாட் சாபுவின் பிடிவாதம் மற்றும் அவரது அறிக்கைக்காக மன்னிப்பு கோர மறுப்பது போன்றவற்றால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
“அவர் கம்யூனிஸ்ட்களுக்கும் அவர்களது சின்னத்திற்கும் கௌரவம் வழங்கியுள்ளார்”, என்று அலியாஸ் கூறினார்.
அச்சம்பவத்திற்குப் பின்னர் சுமார் 800 பேர் செராமாவில் கலந்து கொண்டனர்.


























