சபாவில் இன்னொரு அம்னோ பெரும்புள்ளி பிகேஆர் கட்சியில் சேர்ந்தார்

முன்னாள் தஞ்சோங் அரு அம்னோ தொகுதித் தலைவர் யாஹ்யா லாம்போங் அந்தக் கட்சியிலிருந்து விலகி பிகேஆர்-ல் நேற்று சேர்ந்துள்ளார்.

அதற்கு சில மணி நேரம் முன்னதாக முன்னாள் அம்னோ பொருளாளர் இப்ராஹின் மெஹுடின் பிகேஆர்-ல் இணைந்தார்.

சபா துவாரானில் நேற்றிரவு நடைபெற்ற பிகேஆர் மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களின் போது அந்தத் தகவல் அறிவிக்கப்பட்டதாக கட்சி ஏடான Keadilan Daily கூறியது. அந்தக் கொண்டாட்டங்களில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

“யாஹ்யாவைச் சேர்த்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு பிரபலமான பிஎன் தலைவர்கள் ஆட்சி புரியும் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். அதனால் ஆளும் கட்சி நிலை ஆட்டம் கண்டுள்ளது.” என அந்த ஏடு குறிப்பிட்டது.

யாஹ்யா, பெர்க்காசா உதவித் தலைவரும் சபாவில் இயங்கும் ஒரே சிமிண்ட் தயாரிப்பு நிறுவனமான மாநில அரசுக்குச் சொந்தமான Cement Industries Sabah Sdn Bhd (CIS)ன் தலைவரும் ஆவார்.

2001ம் ஆண்டு அவர் அம்னோ தஞ்சோங் அரு தொகுதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தமது அரசியல் கட்சி விசுவாசத்தை அவர் அடிக்கடி மாற்றிக் கொள்வது வழக்கம்.

இன்னும் அதிகமானவர் பின் தொடருவர்

யாஹ்யாவைப் போன்று இப்ராஹிமும் நிறுவனப் பிரமுகர் ஆவார். அவர் சபாவில் உள்ள எட்டுத் துறைமுகங்களையும் நிர்வாகம் செய்யும் Sabah Ports Sdn Bhdக்கு முழுமையாகச் சொந்தமான Suria Capital Holdings Bhdன் தலைவரும் ஆவார்.

அவர் முன்பு சபா அம்னோ பொருளாளராகப் பணியாற்றியுள்ளார்.

பிஎன் -னை விட்டு தாங்கள் விலகுவதாக யாஹ்யாவும் இப்ராஹிமும் அறிவித்த இரு நிகழ்வுகளிலும் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

ஏற்கனவே துவாரான் எம்பி வில்பிரெட் பூம்புரிங், பியூபோர்ட் எம்பி லாஜிம் உக்கின் ஆகியோர் பக்காத்தான் ராக்யாட்டுக்கு விசுவாசம் தெரிவித்துள்ளனர்.

பிஎன் மீது தாங்கள் வெறுப்படைந்ததால் அதிலிருந்து விலகியதாக அவர்கள் இருவரும் கூறிக்கொண்டனர். ஆனால் அடுத்த தேர்தலில் தாங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட மாட்டோம் எனத் தெரிந்ததும் பசுமையான இடங்களை அவர்கள் நாடியிருப்பதாக கூறப்பட்டது.

முன்னாள் நில கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் கசித்தா கடாம், முன்னாள் முதலமைச்சர் ஒசு சுக்காம், முன்னாள் பாங்கி சட்டமன்ற உறுப்பினர் அமீர் கஹார் டத்து முஸ்தாபா ஆகியோரும் அந்த நால்வரை விரைவில் பின் தொடரக் கூடும் என வதந்திகள் உலாவுகின்றன.

 

TAGS: