டிஏபி: மலேசிய தினத்தில் கூட பிரதமர் பிளவை ஏற்படுத்துகிறார்

மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பது மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆற்றியுள்ள உணர்ச்சியைத் தூண்டும் உரை, பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. அது அவரது ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு விரிசல் என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலிவர் டோனி புவா கூறுகிறார்.

மலேசியா தோற்றம் பெற்ற 49வது ஆண்டுக்கு முதல் நாளன்று அவர் ஆற்றிய உரை சூழ்நிலைகளை மிகவும் மோசமாக்கியுள்ளது என்றார் அவர்.

“மலாய்க்காரர்களுக்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கை, பிஎன் தொடர்ந்து அதிகாரப் பிடியை  வைத்திருப்பதற்கு இனவாத அட்டையை பயன்படுத்தவும் பிரதமர் தயாராக இருப்பதையே நிரூபித்துள்ளது.”

“அவர் அனைத்து மலேசியர்களுக்குமான பிரதமராக தாம் பேசவில்லை என்பதையும்  இந்த நாட்டில் இனப் பிரிவினை தொடருவதற்கு ஊக்கமூட்டுகின்றவர் என்பதையும்  அவர் காட்டி விட்டார்,” என புவா இன்று விடுத்த அறிக்கை கூறியது.

“நஜிப்பின் மருட்டலுக்கு மலாய் சமூகம் எளிதாக அடி பணிந்து விடாது என்றும் மலேசியர்களைப் பிரதிநிதிக்கும் ஒர் அரசாங்கத்தை தேர்வு செய்வதற்கு மற்ற சமூகங்களுடன் இணைந்து மலாய் சமூகமும் வாக்களிக்கும் என்றும் தாம் நம்புவதாக புவா மேலும் சொன்னார்.

தாம் சொல்வதைச் செய்வதில்லை”

பிரதமர் தாம் சொல்வதைச் செய்வதில்லை என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கும் தமது அறிக்கையில் சாடியுள்ளார்.

“மிதவாத அரசியலையும் அரவணைத்துச் செல்லும் போக்கையும் நஜிப் நிராகரித்து தமது இனவாத அணுகுமுறையின் வழி தமது சொந்த ஒரே மலேசியா சிந்தாந்தத்தையும் கைகழுவி விட்டார்,” என்றார் லிம்.

13வது பொதுத் தேர்தல் அனைத்து மலேசியர்களும் நிலைத்திருப்பதற்கான கொள்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றுக்கு இடையிலான போட்டியாக இருக்க வேண்டுமே தவிர மலாய்க்காரர்களை மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராகத் தூண்டி விடுவதாக இருக்கக் கூடாது என்றும் லிம் சொன்னார்.

“மலாய்க்காரர்களை மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராகவும் முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாதாருக்கு எதிராகவும் தூண்டி விடும் இனவாத, தீவிரவாத அரசியலில் அம்னோ வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடு மேலும் சிதறி, பிளவுபட்டு விடும்.”

“ஒரே மலேசியா சாகவில்லை என்பதை மெய்பிக்க அம்னோவும் நஜிப்பும் அத்தைகையை உணர்ச்சிகளைத் தூண்டும் கருத்துக்கள மீட்டுக் கொள்ள வேண்டும்,” என்றும் லிம் வலியுறுத்தினார்.

 

TAGS: