“நேர்மையானவர்கள் என்றால் மனம்போனபடி கள்ள அடையாள அட்டைகளை வாரிக் கொடுத்து நாட்டின் பாதுகாப்புக்கே மிரட்டலை ஏற்படுத்தியுள்ள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.”
சாபாவில் கள்ளக்குடியேறிகள் மீது ஆர்சிஐ அமைக்கப்படும் வாய்ப்பு உண்டு என்கிறார் முகைதின்
கேஎஸ்என்: சாபாவில், மகாதிர் முகம்மட்/ஹாரிஸ் சாலே காலத்தில் ஒரு மில்லியன் சட்டவிரோதக் குடியேறிகள் இருந்ததாகவும் அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்களின் மக்கள்தொகையைக் கூட்டுவதற்காக அதிகாரிகள் அவர்களுக்கு தாராளமாக அடையாள அட்டைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்றும் 1980-இலேயே பரவலாகப் பேசப்பட்டது.
இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விவகாரம் மீது அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைப்பது பற்றி ஆலோசிக்கப்படுவதாக துணைப் பிரதமர் முகைதின் யாசின் மொழிந்துள்ளார்.
ஆர்சிஐ ஒன்று அமைக்கப்பட்டால், குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும். அதை வழங்கியவர்களையும் விட்டுவிடக்கூடாது. அது ஒரு குற்றச்செயல்-தேசத்துரோகம் என்றும் சொல்லலாம்- என்பதால் அவர்களையும் தண்டிக்க வேண்டும்.
சாபா மக்கள் பலமுறை இவ்விவகாரத்தை எழுப்பியுள்ளனர்.அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டால்தான் அவர்களின் இந்தச் சட்டப்பூர்வ கோரிக்கை கவனிக்கப்படும்போல் தெரிகிறது. சாபா அதற்குத் தயாரா?
பீரங்கி: ஆர்சிஐ, கள்ளக்குடியேறிகள் பற்றி விசாரிப்பதோடு குடியேறிகளுக்கு நல்ல/போலி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது பற்றி அதாவது வாக்குகளுக்காக குடியுரிமைகள் வழங்கப்பட்ட விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும்.
முகைதின் ஆர்சிஐ அமைத்து ‘சட்டவிரோத’அடையாள அட்டைகளைத் திரும்பப் பெற ஏற்பாடு செய்வாரானால் சாபாவில் அரசாங்க-எதிர்ப்புப் போக்கைக் கொண்ட மக்களில் 80 விழுக்காட்டினர் பிஎன்னுக்கு ஆதரவாக திரும்புவார்கள் என்பது உறுதி.
விழிப்பானவன்: அப்கோ தலைவர் பெர்னார்ட் டொம்போக், அவர்களே! விளையாடாதீர்.சாபா மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நீங்கள் என்றும் நேர்மையாக நடந்துகொண்டதில்லை.
எந்தக் காலத்திலாவது ஆர்சிஐ-இன் விசாரணை முடிவு இந்நாட்டில் மதிக்கப்பட்டிருக்கின்றதா? இப்போது இன்னொரு ஆர்சிஐ தேவை என்கிறீர்கள்.ஏன்? ஏதோ பெரிதாக செய்வதுபோல் காட்டிக்கொள்ள வேண்டும்-அதற்காகத்தானே.
ஜிக்கி தாயிஸ்: சாபா கள்ளக்குடியேறிகள்மீது ஆர்சிஐ என்பது நல்ல யோசனைதான். ஆனால், அது பிரச்னையைத் தீர்க்காது. ஏனென்றால் பிஎன் கட்சிகளில் ஒன்றுதான் அதன் அரசியல் வாழ்வுக்காக கள்ளக்குடியேறிகளைப் பாதுகாத்துக்கொண்டு வருகிறதே.
வலைப்பதிவாளன்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற விசாணையைத் தொடங்குங்கள். விசாரணை மட்டும் போதாது.அதன்பின் நடவடிக்கையும் தேவை.
“என்னைப்போல்தான் இருக்கிறார், என்னைப்போல்தான் பேசுகிறார்.ஆனால், அது நானல்ல”, என்பதுபோன்ற கதையெல்லாம் வேண்டாம்.
ஸ்வீபெண்டர்: வியட்நாமிய போரின் முடிவில் வியட்நாமிய அகதிகள் அனைவரும் வளைத்துப் பிடிக்கப்பட்டு முள்வேலிக் கம்பி முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஒருவர்கூட வெளியில் சுற்றித்திரிய அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், இந்தோனேசியாவிலிருந்தும் தென் பிலிப்பீன்சிலிருந்தும் குடியேறிய ஆயிரக்கணக்கானவர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது.அவர்களால் சாபா தெருக்களில் கேள்வி கேட்பாரின்றி சுதந்திரமாக நடமாட முடிகிறது.
இப்படி மக்கள்தொகையைச் செயற்கைமுறையில் அதிகரிக்கும் செயல் கட்டுப்பாடின்றி நடந்து வருகிறது. இந்த திடீர் பூமிபுத்ராக்கள் இந்நாட்டின் பூர்வ குடிகளுக்கும் மலாய்க்காரர்களுக்கும் மட்டுமே உரிய உரிமைகளையும் சலுகைகளையும் பெறவும் போட்டியிடத் தொடங்கி விட்டார்கள்.
அப்2யு: ஆர்சிஐ தேவையில்லை. அது காலத்தை விரயமாக்கும் செயலாகத்தான் இருக்கும். நேர்மையானவர்கள் என்றால் மனம்போனபடி கள்ள அடையாள அட்டைகளை வாரிக் கொடுத்து நாட்டின் பாதுகாப்புக்கே மிரட்டலை ஏற்படுத்தியுள்ள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.