இங்கே கூ காம் : “நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் அல்ல”

தமது டிவிட்டர் செய்திக்காக அரசியல் களத்தில் இரு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புக்களை எதிர் நோக்கியுள்ள பேராக் டிஏபி தலைவர் இங்கே கூ காம், தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் அல்ல என விளக்கியிருக்கிறார்.

“நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் என்னும் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்,” என அவர் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

Sam Bacile தயாரித்ததாகக் கூறப்படும் ‘Innocence of Muslims’ என்ற அமெரிக்கத் திரைப்படம் தொடர்பில் தமது நேற்றைய டிவிட்டரில் வெளியிட்ட செய்தி, அந்தத் திரைப் படத்தை ஆட்சேபிக்கும் முஸ்லிம்களை அவமானப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளதல்ல என அவர் அந்த மலாய் நாளேட்டிடம் கூறினார்.

திரைப்படம் ஒன்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக நேரத்தையும் சக்தியையும் செலவு செய்வது பொருத்தமானது தானா   என்று மீண்டும் சிந்திக்குமாறு மட்டுமே தாம் கேட்டுக் கொண்டதாக அவர் சொன்னார்.

“உண்மையில் நானும் அந்த வீடியோ விநியோகம் செய்யப்படுவதை கண்டிக்கிறேன். ஒரு மனிதனுக்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்காக உலகம் முழுவதும் நடத்தப்படும் ஆட்சேபங்கள் பொருத்தமானது தானா என நான் சொல்ல விரும்பினேன்.”

“அது வெறும் கேள்விதான். என்னைப் பொறுத்த வரையில் உலகம் முழுவதும் செலவு செய்யப்பட்டுள்ள நேரத்தையும் ஆற்றலையும் மேலும் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம்,” என அவர் பென்காசியில் அண்மையில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கிறிஸ்டபர் ஸ்டீவன்ஸ் கொல்லப்பட்டது உட்பட உலகம் முழுவதும் நிகழும் ஆட்சேபம் பற்றிக் குறிப்பிட்ட போது இங்கே கூறினார்.

எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை”

வரும் வெள்ளிக்கிழமையன்று கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பு கூட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்துவது பற்றி அம்னோ இளைஞர் பிரிவு வழங்கிய யோசனை குறித்து கருத்துரைத்த இங்கே தாம் அதனை மதிப்பதாகச் சொன்னார்.

“அது அவசியம் எனக் கருதினால் நாங்கள் அந்த நடவடிக்கையை மதிக்கிறோம். இஸ்லாத்துக்காக அவர்கள் ஒன்றுபட விரும்பினால் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.”

Bacile-க்கு எதிராக முஸ்லிம்கள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் விடுத்துள்ள வேண்டுகோள் பற்றி புருவாஸ் எம்பி-யான அவர் தமது டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

“Sam Bacileக்கு எதிராக முஸ்லிம்கள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் என கைரி விரும்புகிறார். அது இஸ்லாத்துக்கா அல்லது அவருடைய அரசியல் ஆதாயத்துக்கா ? முஸ்லிம்கள் அதன் மீது மிக அதிகமான நேரத்தையும் சக்தியையும் வீணாக்கிக் கொண்டிருக்கின்றனரா ?”

அந்த டிவிட்டர் செய்தி பெரும் சர்ச்சையை உருவாக்கி விட்டது. கைரி, பேராக் மந்திரி புசார் ஸாம்ரி அப்துல் காதிர், பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருடின் ஹசான் உட்பட ஆளும் கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் அதனை குறை கூறினர்.

இன்று இங்கே-க்கு எதிராக அரசு சாரா சில முஸ்லிம் அமைப்புக்கள் இன்று போலீசில் புகார் செய்யவிருக்கின்றன.

 

TAGS: