ஜனநாயகத்தில் ‘பாச்சா’ பலிக்கவில்லை; பயமுறுத்தும் தந்திரங்களைக் கையாள்கிறது பிஎன்

அயல்நாட்டு ஜனநாயக-ஆதரவு அமைப்புகள், உள்நாட்டு என்ஜிஓ–களுக்கு நிதியுதவி செய்து அரசாங்கத்தை நிலைகுலைய வைக்க முயல்வதாக ஆளும் கூட்டணி அதன் ஊடகங்களில் சரமாரியாகக் குற்றம் சாட்டிவருவது அது “சித்தம் கலங்கிப்போயிருப்பதன் வெளிப்பாடு” என்று வருணிக்கிறார் சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான்.

“சட்டப்பூர்வமான நிறுவனங்களையும் சமூக அமைப்புகளையும் சங்கங்களையும் பழித்துரைப்பதும் அயல் நாடுகள் கமுக்கமாக மலேசியாவுக்குக் குழிபறிப்பதாகக் குற்றம்சாட்டுவதும் பிஎன் அனைத்துலக அளவில் அச்சமூட்டும் தந்திரங்களைக் கடைப்பிடிப்பதைக் காண்பிக்கிறது.

“இந்த அச்சமூட்டும் தந்திரங்கள் பிஎன் உண்மையான ஜனநாயகத்தைக் கண்டு அரண்டு போயிருப்பதைத்தான் அம்பலப்படுத்துகின்றன.அதனால்தான் இருண்டதெல்லாம் பேயாக அதன் கண்ணுக்குத் தெரிகிறது”, என்றவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவும் அம்னோ தொடர்புள்ள பெரித்தா ஹரியான், நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் ஆகியவையும் அமெரிக்காவின் தேசிய ஜனநாயக அறக்கட்டளை( National Endowment for Democracy-என்இடி)யும் மற்ற பன்னாட்டு அமைப்புகளும் மலேசிய சமூக அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதாக முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.

அதேபொன்ற செய்தி டிவி3-இன் பிரதான செய்தி அறிக்கையிலும் இடம்பெற்றுது.இவை எல்லாமே, உலக முழுவதும் சட்டப்பூர்வ அரசுகளைக் கவிழ்க்கவும் அவற்றுக்குப் பதிலாக தங்கள் சொல்படி கேட்பவர்களை ஆட்சியில் அமர்த்தவும் அயல்நாடுகள் சமூக அமைப்புகளுக்கு நிதியுதவி செய்கின்றன என்ற கருத்தை மறைமுகமாக உணர்த்துவதுபோல இருந்தன.

கண்டிக்கத்தக்கக் கூற்று

“பிஎன் தன்னுடையதைச் ‘சட்டப்பூர்வ அரசாங்கம்’ என்று அசட்டுத்தனமாகக் கூறிக்கொள்வது நகைப்புக்குரியது. நேர்சிந்தனை கொண்ட மலேசியர் அது கண்டிக்கத்தக்க கூற்று என்பதை அறிவர்”, என்றார் பாரு.

“நான் (பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக்குக்கு நினைவுறுத்த விரும்புகிறேன், தேர்தல் தில்லுமுல்லுகள்,நினைத்தபடி ஆடும் நீதித்துறை,பத்திரிகைச் சுதந்திரத்துக்கே இடமில்லாதபடி எல்லா ஊடகங்களையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பது, மக்களுக்கு அச்சத்தை ஊட்டும் சட்டங்கள், மாசுபடுத்தும் இயக்கங்கள்,இப்போது பயமுறுத்தும் தந்திரங்கள் போன்றவை சட்டப்பூர்வ அரசாங்கத்தின் இலட்சணமல்ல”.

பிரதமர் அச்சத்தைப் பரப்ப முயல்வது இது முதல்முறை அல்ல என்றும் அவர் சொன்னார்.கடந்த வாரம் பெக்கான் தொகுதியில் பேசியபோது அடுத்த தேர்தலில் பிஎன் தோற்றால் மலாய்க்காரர்களின் உயிர் வாழ்வே கேள்விக்குறியாகி விடும் என்று சொல்லி நஜிப் “அச்சமூட்ட” முயன்றார்.

மே 4-இல், ஏப்ரல் 28-பெர்சே பேரணியை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு முயற்சி என்றும் நஜிப் கூறியிருந்தார்.

TAGS: