தொல்லை தீர உதவுங்கள்: சுஹாகாமுக்கு சுவாராம் வேண்டுகோள்

அரசாங்கத் துறைகள் விசாரணை என்ற பெயரில் தனக்குத் தொல்லை தருவதாக மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அடிப்படை மனித உரிமை ஆணையத்திடம்(சுஹாகாம்) புகார் செய்துள்ளது.

நேற்று சுஹாகாம் தலைமையகத்தில் 14-அம்ச மகஜரை வழங்கிய சுவாராம், தனக்குக் கொடுக்கப்படும் தொல்லைகள் மனித உரிமை மற்றும் சிவில் உரிமை மீறல்கள் என வருணித்து அவை குறித்து ஆணையம் அதன் நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

சுஹாகாம்“அத்துமீறல்களை” நிறுத்திக்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு ஆலோசனை கூற வேண்டும் என்பதுடன் சுவாராமைப் பழி வாங்கும் அரசுத்துறைகளின் வக்கிரப் போக்கையும் கண்டிக்க வேண்டும் என்று அந்த என்ஜிஓ வலியுறுத்தியது.

“உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், சுவாராம் மீது மலேசிய நிறுவனங்கள் ஆணையம்(சிசிஎம்) மேற்கொண்டிருக்கும் விசாரணையில் தம் அதிகாரத்தைமீறி தலையிடுவது சுவாராமுக்குக் கவலை அளிக்கிறது”, என்று சுவாராம் செயல்முறை இயக்குனர் இ.நளினி(வலம்) கூறினார்.

இஸ்மாயில் சப்ரி, சுவாராம்மீது இரண்டு நாள்களில் வழக்கு தொடுக்கப்படும் என்று அறிவித்த பின்னர், வழக்கு தொடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டத்துறைத் தலைவர் சிசிஎம் சமர்பித்த விசாரணை ஆவணங்களைத் திருப்பி அனுப்பியதைச் சுட்டிக்காண்பித்த நளினி, அச்சம்பவத்தில் அமைச்சர் “சங்கடமான நிலைக்கு” ஆளானார் என்றார்.

தன் வாகனமான சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்டின் கணக்குகளில் ஒளிவுமறைவு கிடையாது என்று வலியுறுத்தும் சுவாராம், நீர்மூழ்கி வாங்கிய விவகாரம் தொடர்பில் தான் பிரான்சில் வழக்கு தொடுத்ததால்தான் தன்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறுகிறது.

இப்போது ஆர்ஓஎஸ் குறை கண்டுபிடிக்கப்  புறப்பட்டுள்ளது

இன்னொரு தனி அறிக்கையில் நளினி, புதிய விசாரணையைத் தொடங்கியுள்ள சங்கப் பதிவகத்தையும்(ஆர்ஓஎஸ்) கண்டித்தார்.

“2012 ஜூலை 3-இலிருந்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கையில் சங்கம் அமைக்கும் உரிமையையும் மற்ற உரிமைகளையும் ஒரேயடியாக ஒழித்துக்கட்ட ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவே சுவாராம் கருதுகிறது.

“மலேசியாவின் தலையாய மனித உரிமைக் காவலர்கள் என்ற முறையில் எல்லா வகையான தொல்லைகளையும் அரசுத்துறைகளின் வக்கிரப் போக்கையும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”, என்றாரவர்.

“சுவாராம்” என்பதும் அதன் சட்டப்பூர்வ அமைப்பான சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்டும் ஒன்றே என்பதை வலியுறுத்திய அந்த என்ஜிஓ, இரண்டும் வெவ்வேறானவை என்று சித்திரிக்க முயல்வது அவற்றுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்காக செய்யப்படும் “அசிங்கமான தந்திரம்” என்று குறிப்பிட்டது.

சங்கம் என்பதற்கு விளக்கமளிக்கும் 1966 சங்கச் சட்டத்தின் பகுதி 2, நிறுவனங்களின் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒன்று சங்கமாகாது என்று விலக்களிக்கிறது.

“அதனால்தான் சுவாராம் மீது விசாரணை நடத்த சங்கப் பதிவகத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால், சிசிஎம் வேறு. அதன் விசாரணையில் 2012 ஜூலையிலிருந்தே சுவாராம் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது”, என்று நளினி கூறினார்.