நஸ்ரி:பட்ஜெட்டுப் பின்னரே கணக்கு அறிக்கை

கடந்த ஆண்டைப் போலவே, வெள்ளிக்கிழமை வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்குப் பின்னரே அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் கணக்கறிக்கை வெளியிடப்படும்.

பட்ஜெட் மீதான விவாதத்திலிருந்து கவனம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்படுவதாக நடப்பில் சட்ட அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார். கணக்கறிக்கை இன்னும் தயாராகவில்லை என்று கூறப்படுவதை அவர் மறுத்தார்,

“அது தயாராகி விட்டது. இம்முறை அறிக்கையில் தனி பத்திகளில் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன”, என்றாரவர்.

வழக்கமாக பட்ஜெட்டுடன் கணக்கறிக்கையும் சேர்த்தே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த ஆண்டு அது தாமதமாகவே வெளிவந்தது.அதனால், மாற்றுக்கட்சியினர் அதைக் கடுமையாகக் குறை கூறினர்.

நஸ்ரி இன்று நாடாளுமன்றத்தில் ஊடகங்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய இடவசதியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

நாடாளுமன்றக் கட்டிடத்தில் 40-க்கு மேற்பட்டவர்கள், ஒரு பூப்பந்தாட்ட ஆடுகளம் அளவுக்குப் பரப்புள்ள ஓரிடத்தில் பணியாற்றுவதன் சிரமங்கள் குறித்து செய்தியாளர்கள் முறையிட்டிருந்தனர்.

இப்போது கீழ்த்தளத்தில் உள்ள கூடம் முழுவதும் மேசை நாற்காலிகள் போடப்பட்டு மின் இணைப்பு வசதிகளுடன்  ஊடகங்களுகாக ஒதுக்கப்பட்டுள்ளது.

TAGS: