நஸ்ரி: கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் அரசமைப்புக்கு எதிரானது

தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவதைத் தடுக்கும் எந்தச் சட்டமும் சங்கத்தை அமைக்கும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் கூட்டரசு அரசமைப்பின் 10வது பிரிவுக்கு முரணானது என அரசாங்கம் இன்று கூறியது.

டிஏபி-யின் புக்கிட் குளுகோர் எம்பி கர்பால சிங் தொடுத்த அளித்த பதிலில் அது அவ்வாறு தெரிவித்துள்ளது.

“மக்கள் எந்த ஒரு கட்சியிலும் சேருவதற்கும் அல்லது எந்த ஒரு கட்சியிலிருந்தும் விலகுவதற்கும் சுதந்திரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.

“அவ்வாறு செய்வதற்குத் தண்டனையாக ‘தங்கள் இடங்களை காலி செய்ய வேண்டிய’ கட்டாயம் இருக்கக் கூடாது.’

“கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை’ கொண்டு வரும் பொருட்டு கூட்டரசு அரசமைப்பில் மாற்றம் செய்வதற்கு பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் யோசனை தெரிவித்தால் அதனை அரசாங்கம் ஆதரிக்குமா என்று கர்பால் பிரதமரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் பதிலை வழங்கிய பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கேள்வியை ஒதுக்கி விட்டார்.

அரசமைப்பில் எந்தத் திருத்தமும் “கொள்கை சம்பந்தப்பட்ட விஷயமாகும். அதனை முழுமையாக அதனுடன் தொடர்புடைய மற்ற சட்டங்களுடன் சேர்த்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

கட்சிகளை மாற்றிக் கொள்ளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களுக்கு எதிரான தண்டனைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை நடப்புச் சட்டங்கள் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கவில்லை என்றார் அவர்.

நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து நோட்டீஸ் கிடைத்த பின்னர் ஒர் இடம் காலியானதா இல்லையா என்பதை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மட்டுமே கூட்டரசு, மாநில அரசமைப்புக்களும் தேர்தல் ஆணையச் சட்டமும் தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்துள்ளன என்றும் நஸ்ரி குறிப்பிட்டார்.

மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் நடு வழியில் கட்சி தாவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் மசோதா ஒன்றை நவம்பர் மாதக் கூட்டத்தில்  தாக்கல் செய்ய எண்ணம் கொண்டுள்ளதாக டிஏபி தலைமையிலான பினாங்கு அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்துள்ளது.

 

TAGS: