அந்தப் ‘பிசாசு’ பேசி விட்டது; ஆனால் மலேசியர்கள் செவிமடுப்பார்களா ?

‘மகாதீர் இறைவன் அனுப்பியவர். இந்த ஆட்சி போக வேண்டும் என மலேசியர்களை நம்ப வைப்பதற்கு இவ்வளவு அபத்தங்களை அவர் எப்படி வெளியிட முடியும்’

டாக்டர் மகாதீர்: ஒரு கைப்பாவையை பிரதமராக அமர்த்த சோரோஸ் விரும்புகிறார்

பார்வையாளன்: வாக்காளர்களைக் கவரவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறவும் பல வகையான வெறுக்கத்தக்க மோசடிகளில் அம்னோ இறங்கியுள்ளது.

அது ஏற்கனவே தொகுதிகளில் தில்லுமுல்லு செய்துள்ளது. வாக்குகளுக்காக அந்நியர்களுக்கு சட்ட விரோதமாக மை கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தில் உள்ள மோசடிக்காரர்களின் துணையுடன் மேலும் பல குறுக்கு வழிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

அம்னோ தான் வெற்றி பெறுவதை உறுதி செய்ய ஊடகங்கள் மீது உள்ள ஏகபோக ஆதிக்கத்தை பயன்படுத்தி மலேசிய வாக்காளர்களக் கவர பொய்களை அள்ளி வீசுகின்றது.

கடந்த காலத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் அம்னோவும் அச்சத்தை ஊட்டும் தந்திரத்தையும் (மே 13 பூச்சாண்டி) பயன்படுத்தியுள்ளனர். எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது ஜோடிக்கப்பட்ட குதப்புணர்ச்சி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. கம்யூனிஸ்ட் பூச்சாண்டியும் காட்டப்பட்டது.

அந்த வெறுப்பைத் தரும் பாத்திரமான  மகாதீர் ‘ஒரு கைப்பாவையை பிரதமராக அமர்த்த சோரோஸ் விரும்புகிறார்’ என்ற பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். அதனால் அந்த பொய் மீது சர்ச்சையில் இறங்கி நேரத்தை வீணாக்கக் கூடாது.

அலிஸ்கேட்: மலேசியாவில் ஆட்சி மாற்றத்தை அனைத்துலக நிதியாளர் ஜார்ஜ் சோரோஸ் விரும்புகிறாரா ? நீங்கள் உண்மையைத் தான் சொல்கின்றீர்களா ? சோரோஸ் இந்த நாட்டைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்கப் போவதில்லை. மலேசியா சோரோஸுக்கு முக்கியமானது அல்ல.

ஆனால் எங்களுக்கு மலேசியா தான் எல்லாம். மாற்றத்தை விரும்புவது நாங்களே. ஊழல், பொய்கள், தில்லுமுல்லுகள், அச்சத்தை ஏற்படுத்துதல், திருடுவது, விரயம், நீங்களும் உங்கள் நண்பர்களும் தொடர விரும்பும் அழிவு ஆகியவை போதும். போதும்.

ஆகவே தயவு செய்து எங்கள் கௌரவத்தைக் திருப்பிக் கொடுங்கள். நாங்கள் செய்ய முடிந்ததை செய்ய எங்களை விட்டு விடுங்கள்.

அபாசலோம்: நாட்டுக்கு உள்ளும் புறமும் இது போன்ற மறைமுக சதிகளை கண்டு பிடித்து கண்டு பிடித்து 22 ஆண்டுகள் ஆட்சி செய்த அவருடைய ஆற்றலைப் பாராட்ட வேண்டும்.

தமது நாட்டைப் பாதுகாப்பதற்கு இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தலைவரை மலேசியாவைத் தவிர வேறு நாட்டிலும் பார்க்க முடியாது.  அவர் நாட்டை நீண்ட காலத்துக்கு வழி நடத்த வேண்டும்.

ஒய்வு பெற்ற பின்னரும் கூட எது சரி, எது சதி என்பதைக் கண்டு பிடித்து நமக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

அவர் 150 ஆண்டுகள் வாழ்ந்து தீய சக்திகளிடமிருந்து மலேசியாவைப் பாதுகாத்து, நஜிப் ரசாக், சுவா சொய் லெக், ஷாரிஸாட் அப்துல் ஜலில், அப்துல் தாயிப் மாஹ்முட், முகமட் கிர் தோயோ, இப்ராஹிம் அலி, அவரது புதல்வர்கள் போன்ற நேர்மையான நடத்தை உடைய பாதுகாப்பான கரங்களிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

பாக்மேன்: அந்தப் ‘பிசாசு’ பேசி விட்டது. ஆனால் மலேசியர்கள் செவிமடுப்பார்களா ? அந்தப் பிசாசிடமிருந்து மலேசியாவை பாதுகாப்பதற்கு நாம் எங்கே தேவதையை அழைக்க முடியும் ?

சின்ன அரக்கன்: இன்றைய உலகில் அரசியலும் அரசியல் நிர்வாகமும் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்று ஒரே மாதிரியாக இருப்பதாக மகாதீர் எண்ணுவது பரிதாபத்துக்குரியது.

1980களில் மகாதீர் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு 22 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் அரசியல் எண்ணங்களும் அரசாங்க அமைப்புக்களும் குறிப்பிடத்தக்க பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளன.

கைப்பாவை ஆட்சிகள் என்பதே இல்லை. சோரோஸ் உட்பட எந்தக் கோடீஸ்வரரும் தங்கள் விருப்பம் போல நாடுகளை ‘வாங்கவும்’ முடியாது. ‘விற்கவும்’ முடியாது. தகவல், தொடர்பு தொழில்நுட்பங்கள் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. அதனால் அதிகார அத்துமீறல், ஜனநாயகம் சீரழிக்கப்படுவது ஆகியவற்றை பற்றி எந்த நாட்டைச் சேர்ந்த வாக்காளர்களும் இப்போது நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

தனது தவறுகளுக்கு எதிர்க்கட்சிகள் மீது எப்போதும் பழி போடும் அரசாங்கத்தை அதன் சொந்த மக்களே விரட்டி விடுவர். பிஎன் அரசாங்கம் தனது சொந்தப் புதைகுழியை தானே தோண்டிக் கொண்டிருக்கிறது. அந்த வேலையைச் செய்வதற்கு சோரோஸ் தமது பொன்னான நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

அபாசிர்: மகாதீர் இறைவன் அனுப்பியவர். இந்த ஆட்சி போக வேண்டும் என மலேசியர்களை நம்ப  வைப்பதற்கு இவ்வளவு அபத்தங்களை அவர் எப்படி வெளியிட முடியும்.

அடையாளம் இல்லாதவவன்_3e2c: சோரோஸின் திறந்த சமுதாய அற நிறுவனம் உலகம் முழுவதும் குறிப்பாக கிழக்கு  ஐரோப்பிய நாடுகளில் ஆற்றியுள்ள பணிகள் பற்றி மலேசியர்கள் நிறையப் படிக்க வேண்டும். அந்த நாடுகளில் பெரும்பாலானவை முன்பு கம்யூனிச சோவியத் செல்வாக்கின் கீழ் இருந்தவை.

ஐரோப்பாவுக்கு சென்றிருக்காத பல மலேசியர்களை வேண்டுமானால் மகாதீர் எளிதாக முட்டாளாக்கி விடலாம். ஆனால் மக்கள் வாசிப்பதற்கு இணையத்தில் தகவல்கள் நிறையக் கிடைக்கின்றன.