நிக் அஜிஸ்: டிஏபி பேய்களுக்கு அஞ்சும் குழந்தையைப் போல நடந்து கொள்கிறது

கிளந்தானில் அமலாக்கப்படுவதற்கு யோசனை கூறப்பட்டுள்ள ஹுடுட் சட்டத்திற்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே டிஏபி அதனை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார்.

டிஏபி-யை அவர் “பேய்களுக்கு அஞ்சும் குழந்தையைப் போல நடந்து கொள்கிறது” என ஒப்பிட்டுப் பேசினார். கிளந்தானில் அமலாக்கப்படும் ஹிடுட் சட்டம் நியாயமானது என்றும் அதில் முஸ்லிம் அல்லாத சமூகம் சம்பந்தப்படாது என்றும் அவர் சொன்னார்.

“டிஏபி ஏன் எதிர்த்தரப்புக் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் ? ஹுடுட் முஸ்லிம்களுக்காகும். ஆகவே முஸ்லிம்களுடன் டிஏபி-யின் தொடர்பு என்ன ? சிலர் பேய்களுக்கு அஞ்சுவது போல ஹுடுட்டைக் கண்டு பயப்படுகின்றனர்,” என அவர் நேற்று கோத்தாபாருவில் நிருபர்களிடம் கூறினார்.

டிஏபி எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் கிளந்தான் ஷாரியா நீதிமன்றங்களில் ஹுடுட் சட்டம் அமலாக்கப்படும் என நிக் அஜிஸ் அண்மையில் அறிவித்திருந்தார்.

என்றாலும் எதிர்த்தரப்புக் கூட்டணியின் பொதுவான  கொள்கை வடிவமைப்பில் ஹுடுட் அமலாக்கமும் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தாங்கள் முழுமையாக விலகப் போவதாக டிஏபி தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

பெர்னாமா