கூட்டரசு அரசாங்கக் கடன்கள் இவ்வாண்டு 502.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இந்த அளவு முந்திய ஆண்டை விட 10.1 விழுக்காடு கூடுதலாகும். அந்த 502.4 பில்லியன் ரிங்கிட் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53.7 விழுக்காட்டுச் சமமாகும்.
சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காடு என்னும் உச்ச வரம்பை கூட்டரசுக் கடன் அளவு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
2006ம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அளவு இரு மடங்கு கூடியுள்ளது. இது கிட்டத்தட்ட ஒவ்வொரு மலேசியருக்கும் 17,000 ரிங்கிட் கடனுக்கு சமமாகும்.
நாட்டின் வரலாற்றில் கடன் அளவு 500 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளது இதுவே முதன் முறையாகும். 53.7 விழுக்காடு என்பது 1990ம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள பெரிய அளவாகும்.
2011/2012ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையில் அந்த விவரங்கள் அடங்கியுள்ளன. 2011ம் ஆண்டில் நாட்டின் மொத்த கடன் அளவு 456.1 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைகளை குறைப்பதற்கு செலவுகளைக் கட்டுப்படுத்த வாக்குறுதி அளித்துள்ள சீர்திருத்தங்களை அரசாங்கம் அமலாக்கா விட்டால் மலேசியாவின் கடன் மதிப்பீடு மோசமடையும் என இரண்டு அனைத்துலக மதிப்பீட்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.