விரைவில் வெளிவரும் தலைமைக் கண்காய்வாளர் (ஏஜி) அறிக்கை. 2013 பட்ஜெட் என்னும் ‘கஞ்சா’வால் ஏற்பட்டிருக்கும் போதையைத் தெளிய வைக்கும் என்று பாஸ் கூறுகிறது.
கணக்கறிக்கையின்முன் பட்ஜெட் முக்கியத்தும் இழக்கும் என்பதால் மத்திய அரசு வேண்டுமென்றே அதன் வெளியீட்டைத் தாமதப்படுத்தியது என்று பாஸ் விளம்பரப் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
“அதன் விளைவாக கசிவுகள், நிதி மற்றும் அதிகார மீறல்கள், நிர்வாகக் குளறுபடிகள் பற்றி எல்லாம் கவனிக்காமல் பட்ஜெட் அறிவிக்கப்பட்டதன்மீது மட்டுமே ஆய்வுகள் கவனம் செலுத்தின”, என்றாரவர்.
கணக்கறிக்கை வெளிவந்தால், அது நஜிப்பின் ‘கஞ்சா’ போதைக்கு மாற்று மருந்தாக விளங்கும் என்று துவான் இப்ராகிம் நம்புகிறார்.
“கடந்த ஈராண்டுகளாக வெளிவந்த ஏஜியின் அறிக்கைகள் அரசாங்கம் திருந்தவில்லை என்பதைத்தான் காண்பிக்கின்றன. அதைச் சுட்டிக்காட்டி ஏஜி ஒவ்வோர் ஆண்டும் கண்டன தெரிவித்தும் வந்திருக்கிறார்.
“நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) விவகாரத்தில் அதிகம் செய்யப்படவில்லை என்பதையும் ரிம40,000-க்கு கணினி வாங்கியது, ரிம56,350-க்கு தொலைநோக்கி வாங்கியது போன்ற விவகாரங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் பிஎன் உணர்ந்தே இருக்கும்”. அண்மைய ஆண்டுகளில் கணக்கறிக்கை அம்பலப்படுத்திய விவகாரங்களைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு பேசினார்.
ஒருமுறை மட்டும் கொடுக்கப்படும் அன்பளிப்புகளை பட்ஜெட் அதிகம் வலியுறுத்துவது, நஜிப்பிடம் பொருளாதாரத்தை எழுச்சியுறச் செய்யும் வழிமுறைகள் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.
“ஒருமுறை மட்டும் கொடுக்கப்படும் அன்பளிப்புகள் அவற்றைப் பெறுவோருக்குத் தற்காலிக திருப்தி அளிக்கலாம்.ஆனால், உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினத்தை மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கத்தான் செய்வார்கள்.
“இது கஞ்சாவைப் போன்றது. தற்காலிகமாக மக்களை உணர்ச்சியற்று வைத்திருக்கும்.ஆனால், முடிவில் வலியை உணர்வார்கள்”, என்று கூறிய அவர் வாக்குகளுக்குத் தூண்டில் போடுவதுதான் அவற்றின் நோக்கம் என்றார்.
ஏஜி அறிக்கை வெளிவரும்போது மக்கள் அதைக் கவனமாக ஆராய வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.