பக்காத்தான் ராக்யாட் நிழல் அமைச்சரவையை ஏன் அமைக்கவில்லை என்ற பிஎன் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி, தான் எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் கூட நிழல் ஆட்சிமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளது.
“நிழல் அமைச்சரவை பற்றிக் குறிப்பிடும் போது யார் சிலாங்கூர் மந்திரி புசார் என்பதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளாரா ?” என நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் நிருபர்களைச் சந்தித்த எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வினவினார்.
பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் மட்டுமே அது நடைமுறையில் இருந்து வருகின்றது. தாய்லாந்திலும் இந்தோனிசியாவிலும் அப்படி இல்லை என அவர் மேலும் சொன்னார்.
பக்காத்தான் நிழல் அமைச்சரவையைக் கூட அமைக்க முடியாத போது அது அரசாங்கத்தை அமைப்பது பற்றி சிந்திக்கவே கூடாது என நேற்று நஜிப் கூறியிருந்தார்.
பக்காத்தான் அந்தக் கேள்வியைத் தவிர்ப்பதாக கூறப்படுவதை அன்வார் மறுத்தார்.
“நான் அந்தப் பிரச்னையைத் தவிர்க்கவில்லை. பக்காத்தான் கூட்டரசு அரசாங்கமானால் யார் அமைச்சர்களாக துணை அமைச்சர்களாக இருப்பர் என நீங்கள் அறிய விரும்பினால் பக்காத்தான் ராக்யாட்டில் உள்ள மூன்று கட்சிகளின் முதுநிலைத் தலைவர்கள் பட்டியலைப் பாருங்கள்.”
“எல்லா முதுநிலைத் தலைவர்களும் நியமிக்கப்படுவர்- அதாவது அவர்கள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால்,” என்றார் அன்வார்.
பல்வேறு அமைச்சுக்களுக்கும் நிபுணத்துவக் குழுக்களையும் பக்காத்தான் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“நான் ஏற்கனவே கூறியதைப் போல கல்வி, பொருளாதாரம், பெட்ரோனாஸ் போன்ற விஷயங்களைக் கவனிக்க பக்காத்தானில் உள்ள கட்சிகளைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர்,” என்றார் அவர்.
அந்த விஷயம் குறித்து மேலும் விவரித்த சுபாங் எம்பி ஆர் சிவராசா, முழு நிழல் அமைச்சரவையைக் கொண்டுள்ள நாடுகளைப் போல் அல்லாது மலேசியாவில் அந்த முறைக்கு ஆதரவாக எந்த அமைப்பும் கிடையாது என்றார்.
“நிழல் அமைச்சரவை உள்ள நாடுகளில் அதற்கு ஆதரவாக மனித வளங்களுடன் நிதி உதவியும் வழங்கப்படுகின்றது,” என்றும் அவர் சொன்னார்.
எடுத்துக்காட்டுக்கு ஆஸ்திரேலியாவில் நிழல் அமைச்சரவைக்கு ஆதரவாக 100 ஊழியர்கள் கொடுக்கப்படுள்ளனர்.
குவான் எங்: பக்காத்தான் தலைவர்களுக்கு அதிகார வெறி இல்லை
இதனிடையே பக்காத்தானில் பிரதமராக பெயர் குறிப்பிடப்பட்டவர் இல்லை என பிஎன் பொய்களை கூறிய போதிலும் அந்தப் பதவியை அன்வார் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூட்டணி ஏகமனதாக ஒப்புக் கொண்டுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒவ்வொரு கட்சியையும் சேர்ந்த ஒருவரைக் கொண்ட மூவர் கொண்ட குழுவை நியமனம் செய்துள்ள “புதுமையான வழிமுறை” மூலம் தனக்கு அதிகார வெறி இல்லை என்பதை பக்காத்தான் காட்டியுள்ளதாகவும் டிஏபி தலைமைச் செயலாளருமான அவர் சொன்னார்.
“பக்காத்தான் தலைவர்களுக்கு அரசியல் பதவிகளை பெறுவதற்கான அதிகார வெறி இல்லை. ஆனால் மக்கள் நன்மை தரும் கொள்கைகளிலேயே நாட்டம் கொண்டுள்ளனர்,” என லிம் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
“பக்காத்தான் பின்பற்றுகின்ற புதிய அரசியல் பண்பாடும் மக்களை மய்யமாகக் கொண்ட கொள்கைகளும் சேவகர்களைப் பணக்காரர்களாக மாற்றுகின்ற பிஎன் சித்தாந்தகளுக்கு நேர்மாறானவை,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.