நீதிமன்றம்: மலேசியாகினிக்கு வெளியீட்டு அனுமதி பெறுவதற்கு உரிமை உண்டு

மலேசியாகினி (Malaysiakini) செய்தி இணையத் தளத்தை நடத்துகின்ற Mkini Dotcom Sdn Bhd-க்கு வெளியீட்டு அனுமதியை வழங்குவது இல்லை என்ற உள்துறை அமைச்சு முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் (முறையீட்டு, சிறப்பு அதிகாரங்கள் பிரிவு) தள்ளுபடி செய்துள்ளது.

அது “பொருத்தமற்றது, நியாயமற்றது’ என தீர்ப்பளித்த நீதிபதி அபாங் இஸ்காண்டார் அபாங் ஹஷிம் உள்துறை அமைச்சரது முடிவு அமைச்சின் அதிகார வரம்பை மீறுவதால் தவறான நோக்கத்தைக் கொண்டுள்ளது எனச் சொன்னார்.

“அந்த முடிவு அனுமதியைப் பெறுவதற்கான உரிமை உட்பட வாதியின் பேச்சு சுதந்திர உரிமையை பாதிக்கிறது. அத்துடன் அது அரசமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை சுதந்திரமாகும்,” என்றார் அவர்.

“ஆகவே பிரதிவாதிகளின் (உள்துறை அமைச்சு) முடிவை ரத்துச் செய்யுமாறு சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. விண்ணப்பதாரர் அமைச்சுக்கு தனது கடிதத்தை சமர்பிக்க வேண்டும்.”

நீதிபதி அபாங் இஸ்கந்தர் உள்துறை அமைச்சு செலவுத் தொகையாக ரிம5,000 ஐ மலேசியாகினிக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கே. சண்முகாவும் எட்மண்ட் போனும் Mkini Dotcom-ஐ பிரதிநிதித்தனர்.

“மலேசியாகினி” என்ற பெயரைக் கொண்ட ஒரு நாளிதழை வெளியிடுவதற்கான உரிமத்திற்கு Mkini Dotcom உள்துறை அமைச்சிடம் மனு செய்திருந்தது.

அது ரிம1.00 க்கு கிள்ளான் பள்ளத்தாக்கில் 40,000 பிரதிகளை வெளியிடுவதற்கு செய்துகொண்ட அம்மனுவை உள்துறை அமைச்சு ஆகஸ்ட் 2010-இல் நிராகரித்தது.