ஸ்மார்ட் போனுக்கு (சுட்டிப் பேசிகள்) வழங்கப்படும் ரிம 200 கழிவைக் “குறிப்பிட்ட சில கடைகளில் மட்டுமே” பெற முடியும்.
“விலையில் கழிவைப் பெற மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தில் (எம்சிஎம்சி) பதிவு செய்துகொண்டிருக்கும் கடைகளில் அதைப் பெறலாம்”, என்று நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் முகம்மட் இர்வான் சிரேகார் அப்துல்லா கூறினார்.
கழிவுக்குத் தகுதிபெறும் இளைஞர்களுக்கு சுட்டிப்பேசிகள் விற்பனை செய்வதற்காகத் தனி முகவர்களை நியமிக்க வேண்டும் என்று எம்சிஎம்சி-யை மலேசிய கைபேசி உரிமையாளர் சங்கம் கேட்டுக்கொண்டதாக பெர்னாமா கூறியிருந்தது.
இதன்வழி விற்பனையாளர்கள், போலி கைபேசிகள் விற்பதும் ஆதாயம் பெறுவதற்காக சுட்டிப்பேசிகளின் விலையைக் கண்டபடி உயர்த்துவதும் தவிர்க்கப்படும் என்று சங்கத் தலைவர் முகம்மட் அலி இப்ராகிம் கூறினார்.
ரிம 3,000-க்கும் குறைந்த வருமானத்தைப் பெறும் 21-க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களுக்கு வழங்கப்படும் விற்பனைக் கழிவுக்காக அரசாங்கம் ரிம 300 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
பிடிபிடிஎன்-னை ரத்து செய்வது ‘அதிர்ச்சி அளிக்கும்’
இன்னொரு நிலவரத்தில், பக்காத்தான் அதன் மாற்று பட்ஜெட்டில் தேசிய உயர்கல்வி நிதியை ஒரேயடியாக எடுக்கப்போவதாக மொழிந்திருப்பது பொருளாதாரத்துக்கு அதிர்ச்சி அளிக்கும் என்று இர்வான் கூறினார்.
நேற்றிரவு கோலாலம்பூரில் பட்ஜெட் மீதான கருத்தரங்கம் ஒன்றில் நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் பேசினார். “இன்னும் (கடனில்) ரிம31 பில்லியன் வரவேண்டியுள்ளது. அது (கடன் ரத்து) அதிர்ச்சியை உண்டாக்கும். இது பற்றி பலமுறை விவாதித்திருக்கிறோம். ஒருவர் கடன் வாங்கினால் அதைத் திருப்பிக் கொடுக்கத்தான் வேண்டும் என்பதே எங்களின் முடிவு”.
எனவே, அரசாங்கம், கடனை மொத்தமாக இரத்துச் செய்வதற்குப் பதிலாக அக்டோபர் முதல் நாளிலிருந்து 2013 செப்டம்பர் 30-க்குள் ஒரே தவணையில் கடனைக் கட்டி முடிப்போருக்கு 20விழுக்காடும் கடன்தொகையை விடாமல் கட்டி வருவோருக்கு 10 விழுக்காடும் கழிவு கொடுக்கிறது என்றாரவர்.
“அதுவே, (கழிவு) அதிகம்தான்”, என்று மலேசிய பொருளாதார சங்கமும் மலாயாப் பல்கலைக்கழகமும் ஏற்பாடு செய்திருந்த அக்கருத்தரங்கில் அவர் கூறினார்.
பட்ஜெட்டுக்குப் பிந்திய அக்கருத்தரங்கம் 30ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருவதாக மலேசிய பொருளாதாரச் சங்கத்தின் தலைவர் முகம்மட் ஷரிப் முகம்மட் காசிம் தெரிவித்தார்.