தயிப்-தான் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்கிறார் ஷானாஸ்

சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்முட்தான் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர், அவரே தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பண்காரராகவும் இருக்கலாம் என்கிறார் அவரின் முன்னாள் மருமகள்.

தமது முன்னாள் கணவர் மஹ்முட் அபு பெகிர் தயிப்பின் சொத்துரிமை பற்று சாட்சியமளித்த ஷானாஸ் அப்துல் மஜிட்,49, (வலம்) மஹ்முட்டுக்கு உலக முழுவதும் 111வங்கிக் கணக்குகளும் அவற்றில் ரிம700மில்லியனும் இருப்பதாகக் கூறினார்.

“அவருக்கு கெனடா, அமெரிக்கா, கரிப்பியன், பிரான்ஸ், மொனாக்கோ, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், மலேசியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் உண்டு.

“அவரின் சொத்து மதிப்பு ரிம1 பில்லியனுக்கும் அதிகமாகும்.எனவே நான்  கோரும் முதா(அன்பளிப்பு) ரிம100மில்லியன் சிறியதுதான்”.

ஷானாஸ், தம் முன்னாள் கணவர் மஹ்மூட்டுக்கு (இடம்) எதிராக மொத்தம் ரிம 400 மில்லியன் கோரி தொடுத்திருக்கும் வழக்கில் சாட்சியமளித்தபோது இவ்வாறு கூறினார்.