மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணையை அதிகாரிகள் தொடரும் வேளையில் சுஹாக்காம் என்ற மனித உரிமைகள் ஆணையம் சுவாராமுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு சுவாராம் அந்நிய நிதி உதவிகளைப் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என சுஹாக்காம் கூறியது.
“அனைத்துலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் தனிப்பட்டவர்கள், குழுவினர், சமூக உறுப்பினர்கள் ஆகியோரது உரிமைகள் மீதான 1998 ஐநா பிரகடனம், சுவாராம் அங்கம் பெற்றுள்ள மனித உரிமை பாதுகாப்பு அமைப்புக்களையும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அந்நிய நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவது உட்பட அவற்றின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் அங்கீகரித்துள்ளது.”
“மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புக்கள் சுயேச்சையாகவும் பாதுகாப்பான சூழ்நிலைகளில் இயங்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். தங்களது விதிமுறைகள், அமைப்பு, நடவடிக்கைகள் ஆகியவற்றை முடிவு செய்யும் சுதந்திரமும் அவற்றுக்குக் கொடுக்கப்பட வேண்டும்,” என சுஹாக்காம் தலைவர் ஹாஸ்மி அகாம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
“சுவாராம் விவகாரங்கள், கணக்குகள் மீது விசாரணைகள் நடத்தப்படும் முறையும் அவை விளம்பரப்படுத்தப்படும் முறையும் செய்திகள் வெளியிடப்படும் முறையும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் அந்த ஆணையம் கூறியது.
சிவில் சமூக உரிமைகளுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு சுவாராம் மீதான விசாரணைகளில் பங்கு கொண்டுள்ள அரசாங்க அமைப்புக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
சிவில் சமூக உரிமைகளுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வருவதற்கு இணங்க அதிகமான ஜனநாயக சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதாக நஜிப் அளித்துள்ள உறுதியையும் சுஹாக்காம் வரவேற்பதாக ஹாஸ்மி சொன்னார்.
“நடப்பு விசாரணைகளில் சம்பந்தப்பட்டுள்ள எல்லாத் தரப்புக்களும் சட்டத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கும் ஏற்ப நடந்து கொள்வதோடு பிரதமர் அளித்துள்ள வாக்குறுதிகளில் காணப்படும் நோக்கம், உணர்வு ஆகியவற்றையும் பின்பற்ற வேண்டும்,” என்றார் அவர்.