‘சமயப் பள்ளிகள் நேர வெடி குண்டுகள்’

மலேசியாவில் சமயப் பள்ளிக்கூட முறை ‘நேர வெடி குண்டு’ என கூறப்பட்டுள்ளது.

அந்தக் கல்வி முறையை முழுமையாக ஆய்வு செய்த தேசியத் தற்காப்பு பல்கலைக்கழகத்தின்  விரிவுரையாளர் அரிபின் ஒமாரும் அவரது சகாக்களும் அவ்வாறு முடிவுக்கு வந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வரும் அந்தப் பள்ளிக்கூடங்களின் பாடத் திட்டத்தை யாராவது சோதனை செய்தது உண்டா என பேராசிரியரும் டிஏபி நியமனம் செய்த செனட்டருமான அரிபின் வினவினார்.

சமயப் பள்ளிகள் இப்போது அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் போட்டிக் களமாக விளங்குகின்றன. இப்போது அவற்றில் அம்னோ ஆதிக்கம் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

வரலாறும் இன வம்சாவளி, சமயம் ஆகியவற்றில் அக்கறை கொண்டுள்ள அரிபின், அந்தப் பள்ளிக்கூடங்களில் திருக்குர் ஆன் அல்லது சமய ஆய்வியல் கற்பிக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்றார். ஆனால் அது முறையான சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.

“அந்தப் பள்ளிக்கூடங்களில் குறுகிய அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஹலால், ஹராம் போன்ற கோட்பாடுகள் பெரிய விஷயங்களாக பேசப்படுகின்றன.”

அரிபின் பினாங்கில் “தேசியக் கல்விப் பெருந்திட்டம்” மீது பினாங்கு ஆய்வியல் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றினார்.

“முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து அவை கற்பிக்கும் முறையிலும் பிரச்னைகள் உள்ளன. அவற்றில் பல மற்ற இனங்களிடமிருந்து விலகியே நிற்கின்றன. இன ரீதியாக ஒன்று சேரும் போக்கு அந்தப் பள்ளிக்கூடங்களில் கடுமையான பிரச்னை ஆகும்.”

ஹுடுட் பிரச்சாரம்

தமது பல்கலைக்கழக சகாக்கள் நடத்திய ஆய்வு அடிப்படையில் அரிபின் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஹுடுட் சட்டத்தையும் இஸ்லாமிய நாட்டையும் கொண்டு வருவதற்கான பிரச்சாரத்தில் சமயப் பள்ளிகளும் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

நாட்டின் பல பண்பாட்டுச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் அது மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் அது குறித்து எதுவும் செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்றார் அரிபின்.

“அந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முனைந்தால் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால் அரசாங்கம் ஒரு கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது. இதில் மிகவும் மோசமான விஷயம், அந்தப் பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியாகும் 10 மாணவர்களில் எட்டுப் பேருக்கு வேலை கிடைப்பது இல்லை என்ற உண்மையாகும். அவர்கள் எங்கே போகின்றனர் என்ன செய்கின்றனர் ? அது நமக்குத் தெரியாது.”

அந்த நிகழ்வில் இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமி, பினாங்கு ஆய்வியல் கழக உறுப்பினர்களான தோ கின் வூன், வோங் சின் ஹுவா, கொள்கை வகுப்பு மய்ய இயக்குநர் லிம் தெக் ஹீ ஆகியோரும் உரையாற்றினார்கள்.