பிடிபிடிஎன் கடன்களை முழுமையாக செலுத்தும் மாணவர்களுக்கு கழிவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது பணக்காரர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என ஷா அலாம் பாஸ் எம்பி காலித் சாமாட் கூறுகிறார்.
ஏனெனில் அவ்வளவு பெரிய தொகையை பணக்காரர்கள் மட்டுமே உடனடியாக திரட்டி திருப்பிக் கொடுக்க முடியும் என அவர் இன்று பிற்பகல் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது சொன்னார்.
2012ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதிக்கும் 2013ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்கும் இடையில் தங்கள் பிடிபிடிஎன் கடன்களை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 20 விழுக்காடு கழிவு கொடுக்கப்படும் என பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்த போது அறிவித்தார்.
தங்கள் கடன்களை குறிப்பிட்ட கால அட்டவணைக்கு இணங்க செலுத்தும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10 விழுக்காடு கழிவு கொடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
“நாங்கள் பிடிபிடிஎன் கழிவுகளை தகுதி அடிப்படையில் கொடுக்க விரும்புகிறோம். எடுத்துக்காட்டுக்கு நல்ல தேர்ச்சியைப் பெற்றவர்கள் அல்லது ஏழ்மையில் உள்ளவர்களுக்கு கழிவுகள் கொடுக்கப்படும். உடனடியாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிறையப் பணம் உள்ளவர்களுக்கு அல்ல,” என்று காலித் சொன்னார்.
நல்ல மதிப்பெண்களுடன் பட்டம் பெறுகின்ற மாணவர்களுக்கு கழிவுகளையும் உபகாரச் சம்பளங்களையும் வழங்குமாறு பிஎன் லேடாங் உறுப்பினர் ஹமிம் ஸாமுரி கூறியதை அவர் ஒப்புக் கொண்டார்.
மேல் இரண்டாம் நிலையில் (upper second class) தேர்ச்சி பெறுகின்ற மாணவர்களுக்கான கடன்கள் உபகாரச் சம்பளங்களாக மாற்றப்பட வேண்டும் என்று ஹமிம் யோசனை கூறினார்.
50 விழுக்காடு கழிவு ?
இல்லை என்றால் அந்த மாணவர்கள் CGPA-யில் 3.5க்கு மேல் பெற்றால் அவர்களுடைய கடன்களை 50 விழுக்காடு குறைத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
ஆனால் மாணவர்கள் தங்கள் பிடிபிடிஎன் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என எதிர்க்கட்சிகள் சொல்வதை ஹமிம் சாடினார்.
கூட்டரசு அரசாங்கத்தைத் தான் கைப்பற்றினால் இலவசக் கல்வியை வழங்குவதாகவும் பிடிபிடிஎன் கடன்களை ரத்துச் செய்வதாகவும் பக்காத்தான் வாக்குறுதி அளித்துள்ளது.
அதனால் தங்கள் கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
அது அரசாங்கத்துக்கும் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.