பிகேஆர்: பிஏசிக்குத் தடை உத்தரவு நிலைஆணை மீறலாகும்

மக்களவைத் தலைவர், ஊடகங்களிடம் பேசக்கூடாதென்று பொதுக் கணக்குக் குழு (பிஏசி)வுக்கு விதித்துள்ள தடை, நிலை ஆணைகளை மீறுவதாகவும் நாடாளுமன்றச் சலுகைகளை மீறுவதாகவும் அமைகிறது என பிகேஆர் கூறுகிறது.

“மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா சுட்டிக்காட்டும் நிலைஆணை 85, பிஏசி அதன் வசமுள்ள குறிப்பிட்ட சில ஆதாரங்களையும் ஆவணங்களையும் வெளியிடுவதைத்தான் தடுக்கிறது.

“பண்டிகார் செய்துள்ளதுபோல் ஒட்டுமொத்த தடையுத்தரவு போடும் அதிகாரத்தை வழங்கவில்லை”, என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“பண்டிகாரின் உத்தரவு, மேலும் பல நிதி ஒழுங்கீனங்களும் ஊழல்களும் முறைகேடுகளும் அம்பலப்படுத்தப்பட்டு அதன் விளைவாக ஊழல்-நிறைந்த பிஎன் அரசுக்கு மானக்கேடு நேராமல் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகும்”, என்றாரவர்.
பண்டிகார், ஜூன் 27 தேதியிடப்பட்ட கடிதத்தில் பொதுப்பணம் பயன்படுத்தப்படுவதைத் தணிக்கை செய்யும் பிஏசி, அதன் ஆய்வில் கண்டறிந்ததை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்குமுன் ஊடகங்களிடம் வெளியிடக்கூடாது என்று தடை விதித்திருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அக்குழு, நாடாளுமன்றத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்ட பண்டிகார், அது தான் கண்டறிந்ததை முதலில் நாடாளுமன்றத்துக்குத்தான் தெரிவிக்க வேண்டும் என்றார்.

அதை மறுத்த சுரேந்திரன், பிஏசி நாடாளுமன்றத்துக்குத்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது பண்டிகாருக்கு அல்ல என்றார்.

“எனவே மக்களவைத் தலைவர் அப்படிப்பட்ட உத்தரவை அனுப்பி இருக்கக்கூடாது”,என்றார்.

“பண்டிகாரின் உத்தரவு பிஏசி போன்ற நாடாளுமன்றத் தேர்வுக்குழுக்களைக் கசையடித்து பலவீனப்படுத்தி வைக்கும் ஒரு முயற்சியாகும். பிஎன், நாடாளுமன்றத்தை ஒரு இரப்பர் முத்திரையாகத்தான் எப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது”, என்று கூறிய சுரேந்திரன் பண்டிகார் அக்கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பண்டிகாரின் செயல்பாட்டுக்கு மாறாக, பிரிட்டனில் மக்களைத் தலைவர் ஜான் பெர்கவ், பொது ஆய்வு மேற்கொள்ளும் தேர்வுக் குழுக்களுக்கு “விரிவான புது அதிகாரங்கள்” வழங்க வேண்டும் என்று கூறிவருவதையும் சுரேந்திரன் சுட்டிக்காட்டினார்.

TAGS: