உங்கள் கருத்து: பிரவுனை நஜிப்புடன் ஒப்பிடுவது சரி அல்ல

“பிரவுன் தூய்மையான தேர்தல்களை நடத்தினார். தோல்வி அடைந்தார். 13வது பொதுத் தேர்தல் தூய்மையானதாக இருக்காது. ஆகவே நஜிப் வெற்றி பெறுவார், எக்கானாமிஸ்ட் கருத்தைப் பொய்யாக்குவார்.”

எக்கானாமிஸ்ட்: நஜிப் பிரவுனைப் போன்றவர்

பெர்ட் தான்: முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டோன் பிரவுன் தாம் செல்வாக்குடன் இருந்த காலத்தில் தேர்தலை நடத்தத் தவறி விட்ட அடிப்படையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவருடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளார்.

இருவருமே அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. இருவருமே உறுதியற்றவர்கள். அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்ட சமயத்தில் நஜிப்புக்கு செல்வாக்கு குறிப்பாக அவரது கட்சியில் வலுவாக இருந்தது.

அவர் கட்சிக்குள் எதிர்ப்பை எதிர்நோக்கவில்லை. கட்சியின் உயர் பதவிக்கு அவர் நல்ல ஆதரவுடன் வந்ததால் கட்சிக்குள் உடபூசல்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் இப்போது அவரது உட்கட்சி எதிரிகளுடைய ஆட்கள் எனக் கருதப்படும் சிறிய தலைவர்கள் கூட கட்சித் தலைவருக்கு எதிராக வெளிப்படையாக போர்க் கொடி தூக்குகின்றனர். அதனால் நஜிப்பின் தோற்றத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. அது பொதுத் தேர்தலில் அவருடைய அடைவு நிலையை பாதிக்கும்.

அவர் Machiavelli எழுதிய ‘இளவரசர்’ என்னும் புத்தகத்தை படிக்க வேண்டும். “நீங்கள் அத்தகையை போரைத் தவிர்க்கவில்லை.  நீங்கள் அதனை தள்ளி வைக்கின்றீர்கள். அது உங்களுக்கு பாதகமாக முடியலாம்.”

ஸ்விபெண்டர்: நஜிப் காற்று வீசும் பக்கம் சாயும் புல்லைப் போன்றவர் என்பதை மறந்து விட வேண்டாம். தமது எதிப்பாளர்களை நேருக்கு நேர் சந்திக்கும் துணிச்சல் அவருக்கு எப்போதும் இருந்தது இல்லை.

அவரிடம் உறுதியான நம்பிக்கைகளும் கொள்கைகளும் இல்லை. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கும் துங்கு ரசாலி ஹம்சாவுக்கும் இடையில் நிகழ்ந்த போட்டியில் நஜிப் கடைசி நேரத்தில் மகாதீருக்கு ஆதரவாகத் தமது முகாமை மாற்றிக் கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதனால் மகாதீர் வெற்றி பெற்றார்.

நஜிப் இப்போது ‘தேர்வு செய்யப்படாத இரண்டாவது நீண்ட காலப் பிரதமர்’ என்னும் அடைமொழியைப் பெற்றுள்ளார். அதற்கு மகாதீர் நஜிப்பிடம் தாம் பட்ட கடனை திருப்பிச் செலுத்தியது தான் காரணம்.

நஜிப்பும் அப்துல்லாவைப் போன்று நிறைவான பிரதமர் அல்ல. முஹைடினுக்கும் அது பொருந்தும்.  மன்னர்களை உருவாக்கும் அந்த ‘ஒய்வு பெற்ற பிரதரமரே’ அவர்கள் அங்கு இருப்பதற்கான காரணம்.

கெட்டிக்கார வாக்காளர்: எக்கானாமிஸ்ட் மிகவும் பணிவன்புடன் நடந்து கொண்டுள்ளது. பிரவுன் சிறந்த நிதி அமைச்சராக இருந்தார். அவருடைய சாதனைகள் நமது பிரதமரைக் காட்டிலும் எவ்வளவு மேலானவை.

அவர்கள் இருவரும் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. அதாவது முதல் தேர்தலிலேயே தோல்வி அடைந்தது.

தாய்லெக்: முக்கிய நாளேடுகள் எக்கானாமிஸ்ட் கட்டுரையை வெளியிடுமா ? நிச்சயமாக வெளியிடப் போவதில்லை. அவ்வாறு செய்வது பிரதமரை நிலை தடுமாறுகின்ற முட்டாளாக தோற்றமளிக்கச் செய்து விடும். தமது  தந்தைக்குப் பின்னர் தேர்வு செய்யப்படாத நீண்ட காலப் பிரதமர் என்னும் நிலையை நஜிப்பும் பிடித்து விட்டார். ரசாக் மரபணுக்கள் பற்றி அவ்வளவு தான் சொல்ல முடியும்.

அபுமினாபல்: நஜிப்பின் தந்தை- ரசாக் ஹுசேனை நினைவுபடுத்திய எக்கானாமிஸ்ட் சஞ்சிகைக்கு மிக்க நன்றி. ரசாக் ஹுசேனும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் மே 13 கலவரத்துக்கு பின்னர் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரே அவர் காலமானார்.

#27342##65#: சகோதரர் நஜிப் (ஆ ஜிப் கோர்) செர்பியாவின் ஸ்லோபோடான் மிலோசெவிச், எகிப்தின் ஹொஸ்னி முபாராக் ஆகியோரைப் போன்று போலி ஜனநாயகவாதி என கனடிய நாளேடு ஒன்று குறிப்பிட்டது.

இப்போது செல்வாக்கு மிக்க பிரிட்டிஷ் எக்கானாமிஸ்ட் சஞ்சிகை நஜிப்பை பிரவுனைப் போன்றவர் என வருணித்துள்ளது.

அவர்கள் இருவரும் தவணைக்காலம் முடியும் வரை நல்ல நாட்களை தவற விட்டு விட்டனர்.  ஆ ஜிப் கோர்-ம் தேர்தலில் தோல்வி காணக் கூடும்.

சிகேஎல்: நஜிப் பிரவுனைப் போன்று நிலை தடுமாறுகின்றவர் என்பது சரி தான். ஆனால் சில முக்கியமான விஷயங்களில் அப்படி அல்ல.

பிரவுன் தேர்தலில் தில்லுமுல்லு செய்யவில்லை. அந்நிய- வாக்காளர்களைப் பயன்படுத்தி ஏமாற்றவில்லை. கறை படிந்த வாக்காளர் பட்டியலை அவர் வைத்திருக்கவில்லை. வாக்காளார்களுக்கு ‘லஞ்சம்’ கொடுக்கவில்லை. ரகசியமான பிரச்சார நிதிகளையும் வைத்திருக்கவில்லை. நாளேடுகளைக் கட்டுப்படுத்தவில்லை.

பிரவுன் தூய்மையான தேர்தலை நடத்தினார். ஆனால் 13வது பொதுத் தேர்தல் அப்படி இருக்காது. ஆகவே எக்கானாமிஸ்ட் கருத்தை நஜிப் பொய்யாக்கி விடுவார்.

சக மலேசியன்: அம்னோவுக்குல் நிகழும் அதிகாரப் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நஜிப் பலவீனமாக இருக்கிறார்.

தேர்தலை நடத்துவதை அவர் தள்ளி வைத்துக் கொண்டே போகிறார். அது அவருக்கு நல்ல தோற்றத்தைத் தரவில்லை. அவர் மகாதீர் வலைக்குள் இருக்கும் எண்ணத்தைத் தருகிறது.

வெகு வேகமாக அவரது பிடியும் வாய்ப்புக்களும் தளர்ந்து வருகின்றன. நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சியின் அதிகாரத்தை இழந்த பிரதமர் என்னும் பெயர் அவருக்கு வரலாற்றில் நிலைத்திருக்கும்.

அடையாளம் இல்லாதவன்_3e68: எக்கானாமிஸ்ட் சஞ்சிகைக்கு எதிராக பெர்க்காசாவும் 201 அரசு சாரா அமைப்புக்களும் போலீசில் புகார் செய்யுமா ?

 

TAGS: