பாக்கே பிகேஆர் அறிவுரையை ஏற்று மௌனம் சாதிக்கிறார்

பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமின் நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என பிகேஆர் தலைமைத்துவம் வழங்கியுள்ள அறிவுரையை காலித்-தின் அரசியல் செயலாளர் பாக்கே ஹுசேன் ‘பின்பற்றுவார்’.

பாக்கே தமது வாயை மூடிக் கொள்வது நல்லது என சிலாங்கூர் பிகேஆர் துணைத் தலைவர் சுராய்டா கமாருதினும் கட்சியின் மாநிலச் செயலாளர் சுஹாய்மி ஷாபி-யும் யோசனை கூறியதைத் தொடர்ந்து அதன் மீது கருத்துக் கூற பாக்கே மறுத்து விட்டதாக சினார் ஹரியான் தெரிவித்தது.

“சிலாங்கூர் பிகேஆர் தலைவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் எந்த அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என எனக்கு முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் சையட் ஹுசின் அலி அறிவுரை கூறியுள்ளார் என பாக்கே சொன்னதாக அந்த ஏடு கூறியது.

“சையட் ஹுசின் ஏற்கனவே அந்த விஷயம் மீது சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலியுடனும் பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியுடனும் பேசி விட்டதே அதற்குக் காரணமாகும். ஆகவே நானும் அவ்வாறு செய்வேன். கருத்துக் கூற வேண்டியதில்லை.”

பாக்கே மாநில கட்சித் தலைமைத்துவத்துடன் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர கட்சித் தலைவர்களைத் தாக்கி அறிக்கைகளை வெளியிடக் கூடாது என அக்டோபர் 6ம் தேதி சுராய்டாவும் சுஹாய்மியும் ஊடக அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் காலித் இப்ராஹிம் கூட்டரசு அமைச்சராக நியமிக்கப்படுவார் என அஸ்மின் சொன்னதாக சினார் ஹரியானில் வெளியான செய்தி குறித்து பாக்கே ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தார்.

அஸ்மினும் தாம் அந்தக் கருத்துக்களைச் சொன்னதாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.

பக்காத்தானில் அமைச்சராவதற்கு தகுதியுள்ள பலர் இருப்பதை உணர்த்தும் வகையில் அஸ்மின் அதனைச் சொல்லியிருக்கலாம் என காலித் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

TAGS: