டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி நடத்தப்பட்ட சோதனை மீது சிலாங்கூர் சுல்தான் அடுத்த சில நாட்களில் ஆணை ஒன்றை வெளியிடுவார்.
அந்தத் தகவலை மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று வெளியிட்டார்.
அவருக்கு இன்று காலையில் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா பேட்டி அளித்தார். ஜயிஸ்-தேவாலய விவகாரம் மீது தமது கருத்துக்களையும் அதனை சிறந்த முறையில் தீர்ப்பதற்கான அறிவுரையையும் வழங்குவதாக அப்போது சுல்தான், மந்திரி புசாரிடம் கூறினார்.
“சுல்தானுக்கு மரியாதை காட்டும் வகையில் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களும் நானும் இனிமேல் அந்த விஷயம் மீது எந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க மாட்டோம்”, என்றார் அப்துல் காலித்.
மாநிலம் ஆட்சியாளருடைய அறிவுரைக்கு ஏற்ப நடந்து கொள்ளும் என மாநில ஆட்சி மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் ஷா அலாமில் உள்ள மாநிலச் சட்டமன்றக் கட்டிடத்தில் நிருபர்களிடம் கூறினார்.
அந்த விவகாரம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி நிகழ்ந்த விருந்து நிகழ்வு ஒன்றில் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை மேற்கொண்ட சோதனை சம்பந்தப்பட்டதாகும். அந்தச் சோதனையைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை மூண்டது.
மாநில அரசாங்கம் அந்த சர்ச்சையிலிருந்து கை கழுவுகிறது என்பது அதன் பொருள் அல்ல என்பதை மந்திரி புசார் வலியுறுத்தினார்.
“நாங்கள் அந்த விவகாரத்தைத் தீர்ப்பதில் சம்பந்தப்பட்டுள்ளோம். ஆனால் நாங்கள் பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும். சுல்தான் இஸ்லாத்துக்கான தலைவர் ஆவார். அவர் அந்த விஷயம் மீது ஒர் ஆணையை பிறப்பிப்பார்.”