பக்காத்தான் ஹுடுட் மீது இணக்கம் காணத் தவறியது

ஹுடுட் சட்டத்தைப் பொறுத்த வரையில் கூட்டரசு அரசியலமைப்பை தான், நிலை நிறுத்தப் போவதாக பக்காத்தான் ராக்யாட் அறிவித்துள்ளது.

ஆகவே அந்தச் சட்டம் அமலாக்கப்படுவதற்காக அது அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாது என்பது அதன் அர்த்தமாகும்.

என்றாலும் கிளந்தானிலும் திரங்கானுவிலும் ஹுடுட் தொடர்பாக நடப்பில் உள்ள சட்டங்கள் மீது இணக்கமில்லை என்பதை அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி ஒப்புக் கொள்கிறது. ஏனெனில் அந்த சட்டங்கள் பக்காத்தான் தோற்றுவிக்கப்பட்டதற்கு முன்பு உருவாக்கப்பட்டவை.

கோலாலம்பூரில் உள்ள பாஸ் தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்ற மூன்று மணி கூட்டத்துக்கு பின்னர் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த விவரங்களை அறிவித்தார்.

சிக்கலான அந்த விஷயத்தின் மீது பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில் நிலவுகின்ற மாறுபட்ட கருத்துக்களை மதிக்கும் வகையில் அவ்வாறு முடிவு செய்யப்பட்டதாக அன்வார் சொன்னார்.

அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் ஹுடுட் சட்டத்தை அமலாக்குமா என குறிப்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அன்வார், “இல்லை. அதில் இணக்கம் ஏதுமில்லை,” என்றார்.

பக்காத்தான் ராக்யாட் கூட்டணியைச் சேர்ந்த 26 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கிளந்தான் அரசாங்கம் சார்பில் மாநில மந்திரி புசாரும் பாஸ் ஆன்மீகத் தலைவருமான நிக் அஜிஸ்  நிக் மாட் சார்பில் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் தாக்கியுடின் ஹசான் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றி விளக்க பக்காத்தான் தலைவர்கள் மறுத்து விட்டனர்.