நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில் பெர்சே 2.0-இன் நிதிதிரட்டும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதில் பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்கள், இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் தலைமையில் பாடினார்கள்.
“பெர்சே, பெர்சே, பெர்சே, தேவை தூய்மையான தேர்தல், பெர்சே, பெர்சே, பெர்சே தேவை தூய்மையான அரசியல், பெர்சே, பெர்சே, பெர்சே, தேவை தூய்மையான ஊடகங்கள்…. பொய் சொல்லாதீர்…. நம்ப நாங்கள் மடையர்கள் அல்லர்”, என்றவர்கள் பாட கூட்டத்தில் இருந்தவர்களும் சேர்ந்து பாடினார்கள்.
பெர்சே நிகழ்வுகளுக்குக் கூட்டத்துக்குப் பஞ்சமிராது. ஆனால், நேற்றைய நிகழ்வுக்குக் கூட்டம் குறைவுதான். சுமார் 800 பேரே வந்திருந்தனர். நாள் முழுவதும் பெய்த மழை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், கலந்துகொண்டவர்கள் நிகழ்வை நன்றாக ரசித்தார்கள், அனுபவித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சேர்ந்து பாடினார்கள்; ஆடினார்கள்.
இசைநிகழ்ச்சி தொடங்குவதற்குமுன் பேசிய அம்பிகா, நியாயமான தேர்தலுக்காக பெர்சே விடுத்த எட்டுக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை அரசாங்கத்துக்கு நினைவூட்டுவதுதான் அதன் நோக்கமாகும் என்றார்.
“அரசாங்கம் எட்டுக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்பதில்லை. (தேர்தல் சீரமைப்பு மீதான) நாடாளுமன்றத் தேர்வுக்குழு அதன் அறிக்கையை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்து ஆறு மாதங்கள் ஆகின்றன. தேர்தல் ஆணையம் மாற்றங்களைச் செய்வதில் மிக மெதுவாக செயல்படுகிறது”, என்றார்.
இயக்கக் குழு பாடியது போக பெர்சே இணைத் தலைவர் தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட், Di Atas Padang Bersejarah என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வாசித்தார். Republic of Brickfields முதலிய இசைக்குழுக்கள் இசை வழங்க, ரேய் சியோங் போன்றோர் பாடினார்கள். பாடல்களில் அரசியல் கலந்திருந்தது. “கண்களில் கண்ணீர் புகை, அதனால் கொட்டுகிறது கண்ணீர்”, என்றொரு பாடல், இன்னொன்று “எழு, நிமிர்ந்து நில், உரிமைக்குப் போராடு” என்று கூவி அழைத்தது.
மாலை 4 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு இரவு 11.30 வரை நீடித்தது. இரவு 7 மணி அளவில் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக்கின் மரணம் பற்றி விவரிக்கும் ஆவணப் படமொன்றும் திரையிடப்பட்டது. பெர்சேக்காக அந்நிகழ்வில் ரிம13,000 திரட்டப்பட்டது.