நிக் அசீஸ் விலக வேண்டும் என்கிறார் ஹசன் அலி

பக்காத்தான் ரக்யாட்டில் பாஸ்-டிஏபி ஒத்துழைப்பைத் தற்காத்துப் பேசும் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட் பதவி விலக வேண்டும் என்று சிலாங்கூர் முன்னாள் பாஸ் ஆணையர் ஹசன் அலி கூறியுள்ளார்.

“நிக் அசீஸ் தாமதிக்காமல் கட்சியின் ஆன்மிகத் தலைவர் பதவியைத் துணைத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்பதவியை ஏற்கும் தகுதி அவருக்கு உண்டு என்றே நம்புகிறேன்”, என்றவர் கூறியதாக உத்துசான் மலேசியாவின் ஞாயிறு பதிப்பான  மிங்குவான் மலேசியாவின் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

டிஏபி-யால் பாஸுக்கு எந்தத் “தொந்திரவும்” இல்லை என்பதால் அதனுடன் ஒத்துழைப்பதை ஏன் குறைகூறுகிறார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என நிக் அசீஸ் தெரிவித்ததாக வெள்ளிக்கிழமை நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தன.

“பல தடவை டிஏபி தலைவர் கர்பால் சிங்குடன் மோதிக்கொண்டதையும், டிஏபி ஆலோசகரான லிம் கிட் சியாங் ஹூட்டை அமல்படுத்தும் பாஸின் போராட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்தும் பழித்துரைத்தும் வந்துள்ளதையும் நிக் அசீசும் அவரைச் சுற்றி இருப்பவர்களும் மறந்து விட்டார்களா?”, என்று ஹசன் வினவினார்.

நிக் அசீசின் அறிக்கை டிஏபிக்குத் துணிச்சலைக் கொடுக்கும் என்றும் அது “புல்லுருவிகளுக்கு”- டிஏபி- பக்காத்தான் ஒத்துழைப்பை ஆதரிக்கும் பாஸ் தலைவர்களை வருணிக்க ஹசன் பயன்படுத்தும் ஒரு சொல்-  பாஸின் போராட்டத்தையும் இஸ்லாத்தையும் தாக்குவதற்கு மேலும் ஊக்கமளிக்கும் என்றாரவர்.

இதனிடையே இன்று பெரித்தா ஹரியானுக்கு வழங்கிய நேர்காணலில், பாஸ் “கட்சியைப் பாதுகாக்கக் கடுமையான நடவடிக்கை” எடுத்தாக வேண்டும் என்று ஹசன் குறிப்பிட்டிருந்தார்.

TAGS: