ஹுடுட் சட்டத்துக்கு எதிராக மசீச பின்பற்றும் கடுமையான போக்கு, சீன சமூகத்தை ‘அச்சுறுத்தும்’ நோக்கத்தை மட்டுமே கொண்டது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.
கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மசீச செய்தி, மலாய்க்காரர்களையோ அல்லது முஸ்லிம்களையோ நோக்கமாகக் கொண்டதல்ல எனச் சொன்னார்.
“அதன் நோக்கம் சீனர்களை பயமுறுத்துவதாகும். மலாய்க்காரர்களையோ அல்லது முஸ்லிம்களையோ அல்ல. சீனர்கள் டிஏபி-யைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை அச்சுறுத்த மசீச விரும்புகிறது.”
“கடந்த காலத்தில் இந்த நாட்டை இஸ்லாமிய நாடு எனப் பிரகடனம் செய்த போதும் நாங்கள் இஸ்லாமியப் பண்புகளைப் பின்பற்றுகிறோம் என அறிவித்த போதும் மசீச ஒரு போதும் ஆட்சேபிக்கவில்லை,” என்றார் அவர்.
“அமைதி, ஒற்றுமை, சகவாழ்வு, நீடித்த நிலைத்தன்மை மீதான அனைத்துலகக் கலந்துரையாடல்” என்னும் தலைப்பைக் கொண்ட மலாயாப் பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய பின்னர் மகாதீர் நிருபர்களிடம் பேசினார்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற மசீச ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இஸ்லாமிய நாடு மீதான பாஸ் கட்சியின் அவா பல முறை கண்டிக்கப்பட்டது குறித்தும் அந்தக் கட்சியின் பிரதிநிதியாக டிஏபி திகழ்கிறது என குற்றம் சாட்டப்பட்டது குறித்தும் கருத்துக் கூறுமாறு மகாதீரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
‘ஹுடுட் சட்டத்தை அரசியலாக்குவது’
ஹுடுட் சட்டத்தை அமலாக்கிய பெரும்பாலான நாடுகள் பின் தங்கியுள்ளன என்றும் ஹுடுட் அமலாக்கப்பட்டால் மலேசியாவில் உள்ள முஸ்லிம் அல்லாத சமூகங்கள் சிரமப்படும் என்றும் சுவா இதர பல விஷயங்களுடன் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஹுடுட் விவகாரத்தை அரசியல் பிரச்னையாக்க முயலும் யாரும் இஸ்லாத்தை மதிக்கவில்லை என பொருள்படும் என மகாதீர் மேலும் சொன்னார்.
“ஹுடுட் என்பது சமய விஷயமாகும். அது அரசியல் அல்ல. தங்களது இஸ்லாமிய சான்றுகளை காட்டுவதற்கு அல்லது தாங்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தால் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்கு அதனை அவர்கள் அரசியல் விஷயமாக்குவதை நான் ஒப்புக் கொள்ளவில்லை.”
“உண்மையில் அவர்கள் ஹுடுட்டை ஒரு பிரச்னையாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் இஸ்லாத்தின் போதனைகளை மதிக்கவில்லை,” என அவர் எந்தக் கட்சியையும் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
இஸ்லாமிய உலகம் அளித்த அங்கீகாரத்தின் அடிப்படையிலான இஸ்லாமிய நாடு மலேசியா என மகாதீர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
“இந்த நாடு சமயச் சார்பற்றது அல்லது இஸ்லாம் என்றோ கூட்டரசு அரசமைப்பு சொல்லவில்லை. ஆனால் எங்கள் விளக்கத்தின் அடிப்படையில் மலேசியா ஒரு முஸ்லிம் நாடு ஆகும். காரணம் இஸ்லாமிய உலகம் நம்மை அவ்வாறு அங்கீகரித்துள்ளது,” என்றார் அவர்.
மலேசியா சமயச் சார்பற்ற நாடு அல்ல என மக்களவையில் நேற்று பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் விடுத்த அறிக்கை பற்றியே மகாதீர் அவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.