மாநில அரசுக்கு எதிராக சிலாங்கூர் பிஎன் புதிய போர் முனையை தொடக்குகிறது

சிலாங்கூர் பிஎன் தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் மறு சீரமைப்பு நடவடிக்கை, கணக்காய்வு நிறுவனமான KPMG முடிவுகள் ஆகியவை மீது முழுப் பக்க முழு வண்ண விளம்பரத்தை நேற்று வெளியிட்டு மாநில பக்கத்தான் ராக்யாட் அரசாங்கத்துக்கு எதிராக புதிய போர் முனையைத் தொடக்கியுள்ளது.

“சிலாங்கூர் மக்களுக்கு முரண்பாடான பதில்கள் தேவை இல்லை. உண்மையான விளக்கம் தேவை,” என அந்த விளம்பரம் கூறியது.

“தொடர் எண் 1: “தலாம் கடனை வசூலித்தது மீதான குழப்பம்”,என்ற தலைப்பில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மலாய் மொழி நாளேடான சினார் ஹரியானில் பிஎன் சின்னம், சிலாங்கூர் பிஎன் சுலோகமான “சிலாங்கூரை நேசியுங்கள், பிஎன் மீது நம்பிக்கை வையுங்கள்”, சிலாங்கூர் பிஎன் மக்கள் சேவை மய்யத்துக்கான தகவல் தொடர்பு ஆகியவற்றை அந்த விளம்பரம் கொண்டுள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி அதே ஏட்டில் மாநில அரசாங்கம் செய்த விளம்பரத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் அது அமைந்துள்ளதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது அந்த மய்ய அதிகாரி பூடிமான் ஸுஹ்டி கூறினார்.

தலாம் விவகாரம் மீது அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளைக் கொண்ட அரசாங்க விளம்பரத்தின் படமும் நேற்றைய விளம்பரத்தில் காணப்பட்டது.

அந்தப் படத்தில் வாசகங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அதன் அடிப்படையில் சில மேற்கோள்களும் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளன.

தலாம் கொடுக்க வேண்டிய 392 மில்லியன் ரிங்கிட் கடன் வசூலிக்கப்பட்டு விட்டதாக சிலாங்கூர் அரசும் KPMG-யும் கூறிக் கொள்வது விளம்பரத்தில் எழுப்பப்பட்டுள்ள மூன்று பிரச்னைகளில் ஒன்றாகும்.

தலாம் விவகாரம் மீது இன்னும் பல விளம்பரங்கள் வெளியிடப்படும் என்றும் “தவறானவை” எனக் கருதப்படும் பல அம்சங்களை அது குறிப்பிடும் என்றும் பூடிமான் தெரிவித்தார்.

TAGS: