தகவல் அளிப்போர் சட்டம், ஊழல் பற்றித் தகவல் கசிய விடுவோரைப் பாதுகாக்கும் ஒரு சட்டம். அச்சட்டம் நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழலில் அரசாங்கப் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அதனை அம்பலப்படுத்தியவர்களுக்குப் பொருந்தாது என்கிறார் பிரதமர் துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்.
“என்எப்சி விவகாரத்தில் அவர் தகவல் அளிப்பவராக இல்லை, தம்பட்டம் அடிப்பவராகத்தான் செயல்பட்டிருக்கிறார்.அப்படி தம்பட்டம் அடிப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
“இதில் தகவல் அளிப்பவரின் அடையாளம் காக்கப்படுவதுதான் அடிப்படையான விசயம். அவர் உரக்கக்கூவி உலகறியச் செய்து விட்டார்…. விசயத்தைச் சொன்னவர் அவர்தான் என்பது அனைவருக்குமே தெரிந்து போயிற்று….. இனி என்ன பாதுகாப்பு வேண்டியிருக்கிறது?”. இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது நடப்பில் சட்ட அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“அத்துடன் அச்சட்டம் சட்டத்தை மீறுவோரைப் பாதுகாக்காது. தகவல் அளிப்பவர்களை மட்டுமே பாதுகாக்கும்.
“அவர் பொருளக, நிதிக்கழகச் சட்டத்தை (பாஃபியா) மீறியிருந்தால் அவருக்குப் பாதுகாப்பு அளிக்க இயலாது. அவர் குற்றம் செய்தவராவார்”.
அவர் என்று முகம்மட் நஸ்ரி குறிப்பிட்டது பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை. ரபிஸி என்எப்சி-இன் நிதி அறிக்கைகளை அம்பலப்படுத்தியதன்வழி பொருளக, நிதிக்கழகச் சட்டத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவருக்கு வாய்ப்பூட்டுப் போடவே அக்குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டிருப்பதாக மாற்றரசுக் கட்சி கூறியுள்ளது. ஆனால், அதிகாரிகள் மறுக்கின்றனர்.
நேசனல் பீட்லோட் கார்ப்பரேசனின் நிர்வாக ஊழலை அம்பலப்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன் என்று அறிந்துகொள்ள விரும்பிய காலிட் இப்ராகிமின்( பிகேஆர்-பண்டார் துன் ரசாக்) துணைக் கேள்விக்குப் பதில் அளித்தபோது நஸ்ரி அவ்வாறு கூறினார்.
ரபிஸி செய்தியாளர் கூட்டம் நடத்துவதற்கே அடிக்கடி நாடாளுமன்றம் வருவதாக தெரிகிறது என்று கூறிய அமைச்சர், அவர் எதையும் இரகசியமாக வைத்துக்கொள்ளாமல் அம்பலப்படுத்துவதிலேயே குறியாக இருப்பதால் அவருக்குப் பாதுகாப்பு தேவை என்பதுபோல் தெரியவில்லை என்றார்.
பின்னர், பங் மொக்தார் ரடின் (பிஎன்- கினாபாத்தாங்கான்) கேட்ட துணைக் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த நஸ்ரி, தகவல் அளிப்பவர்கள் ஊழல் பற்றி அம்பலப்படுத்தலாம் ஆனால், அதிகாரத்துவ இரகசிய சட்டம் (ஒஎஸ்ஏ), பாஃபியா சட்டம் ஆகியவற்றின்கீழ் இரகசியமாக பாதுகாக்க வேண்டிய தகவல்களைக் கசிய விடுதல் கூடாது என்றார்.
அது சட்டப்படி தவறு என்று தெரியாத நிலையிலும் அப்படிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தக்கூடாது என்றவர் விளக்கினார். “சட்டம் பற்றி அறியவில்லை என்று காரணம் கூறித் தப்பிக்க முடியாது”.
தகவல்களை அம்பலப்படுத்துவதில் மிகவும் விருப்பமுள்ளவர்களான மாற்றரசுக் கட்சி எம்பிகள், தவறு செய்யாதிருக்க ஓஎஸ்ஏ, பாஃபியா சட்டங்களை கவனமாகப் படிக்க வேண்டும் என்றும் நஸ்ரி அறிவுறுத்தினார்.