Tanda Putera திரையீடு 2013க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Tanda Putera என்னும் திரைப்படத்தின் வெளியீடு இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி அது அடுத்த ஆண்டு தான் திரையிடப்படும்.

அந்தத் தகவலை அதன் இயக்குநரான ஷுஹாய்மி பாபா  தொடர்பு கொள்ளப்பட்ட போது உறுதிப்படுத்தினார்.

அந்தத் திரைப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

“திரையிடப்பட மாட்டாது. ஏனெனில் நவம்பர் 15ம் தேதி ரத்துச் செய்யப்பட்டுள்ளது. புதிய தேதி 2013ல் இருக்கும். இவ்வாண்டு அதனைத் திரையிடுவதற்கு இடம் இல்லை,” என ஷுஹாய்மி குறுஞ்செய்தி மூலம் தெரிவித்தார்.

Tanda Putera திரையிடப்படுவது இரண்டாவது முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை தெரிவிக்க ஷுஹாய்மியும் தயாரிப்பாளரான அய்டா பித்ரி பூயோங்-கும் மறுத்து விட்டனர். அந்தக் கேள்வியை பினாஸ் என்ற தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திடம் எழுப்பப்பட வேண்டும் என அவர்கள் கூறினர்.

“தாமதத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ள பினாஸ் இயக்குநர் நகுய்ப் ரசாக் அல்லது தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர் கமாருதின் சியாராப் ஆகியோருடன் தொடர்பு கொள்வது நல்லது,” என ஷுஹாய்மி சொன்னார்.

பினாஸ் கருத்துரைக்க மறுப்பு

ஆனால் தொடர்பு கொள்ளப்பட்ட போது தமக்கு வேலை அதிகமாக இருப்பதாகக் கூறி  நகுய்ப் ரசாக் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.

மே 13க்கு பிந்திய காலத்தில் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேனையும் துணைப் பிரதமர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானையும் Tanda Putera மய்யமாகக் கொண்டு சித்தரிக்கிறது.

பினாஸ் ஒத்துழைப்புடன் பெசோனா பிக்சர்ஸ் சென் பெர்ஹாட் 4.8 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

அது முதலில் செப்டம்பர் 13ம் தேதி திரையிடப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அதனை நவம்பர் 15க்கு பினாஸ் மாற்றியது. அந்தத் திரைப்படம் மீதான விளம்பர நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ளப்படுவதற்கு திரையீடு தள்ளி வைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.

அந்தத் திரைப்படம் ஜுலை மாதம் தேர்வு செய்யப்பட்ட குழு ஒன்றுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது.

இணையத்தில் வெளியான அந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பெற்ற மே 13ஐ சித்தரிக்கும் சில காட்சிகள் தொடர்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அந்த திரைப்படத்தின் வெளியீடு பொதுத் தேர்தலுடன் பிணைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுவதை ஷுஹாய்மி ஏற்கனவே மறுத்துள்ளார்.