அரசியல் நிதி சீர்திருத்த யோசனையை அரசாங்கம் நிராகரித்தது

அரசியல் கட்சிகளுக்கு அரசாங்க நிதிகளை வழங்குவதின் மூலம் அரசியல் நிதியைச் சீர்திருத்த தெரிவிக்கப்பட்ட யோசனையை அரசாங்கம் நிராகரித்ததாக முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறியிருக்கிறார்.

அவர் வழக்குரைஞர்கள் மன்றம் அரசியல் நிதி மீது ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு ஒன்றில் பேசினார். அந்த நிதிகளைப் பெறுவதற்காக மக்கள் கட்சிகளை அமைக்கக் கூடும் அதற்குக் காரணம் கூறப்பட்டதாக அவர் சொன்னார்.

“பல ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்திடம் அந்த விஷயத்தை எழுப்பினேன். ஆனால் தேர்தல் சட்டங்கள் பற்றி மட்டும் கவனம் செலுத்துமாறும் கூடிய வரை சிறந்த முறையில் தேர்தலை நடத்துமாறும் என்னிடம் கூறப்பட்டது.”

“அந்த யோசனைக்கு எதிரான அரசாங்கத்தின் வாதம் மிகவும் சாதாரணமானது. நாட்டில் அரசியல் கட்சிகள் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கும். மானியத்தை பெறுவதற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் நிறைந்திருக்கும் என அரசாங்கம் கூறியது”, என்றார் அவர்.

அவர் நேற்றிரவு சன்வே பல்கலைக்கழகத்தில் 200 பேர் பங்கு கொண்ட கூட்டம் ஒன்றில் தமது அனுபவத்தை விவரித்தார்.

அரசியல் கட்சிகளுக்கு “சிறிய மானியங்களையும் சிறிய உதவித் தொகைகளையும்” அரசாங்கம் வழங்கலாம் என்று தாம் பரிந்துரைத்ததாகவும் அப்துல் ரஷிட் சொன்னார்.

பெரிய வலுவான அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடுகையல் சிறிய அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு சிரமமப்பட்டன என தேர்தல் ஆணையச் செயலாளராகவும் பணியாற்றியுள்ள அப்துல் ரஷிட் சொன்னார்.

“தேர்தல் ஆணையம் சுதந்திரமான நியாயமான தேர்தல்களை வழங்க முடியாது”

அந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அவர்,  தாய்லாந்தும் இந்தோனிசியாவும் “அதிகமான ஜனநாயகத்துடன்” இருப்பதாக தாம் நம்புவதாக சொன்னார். காரணம் அந்த நாடுகளில் உள்ள தேர்தல் ஆணையங்கள் விரிவான அதிகாரங்களைக் கொண்டுள்ளன.

“மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் சூழ்நிலை பெரிதும் மாறுபட்டுள்ளன. ஊழல் நிகழ்ந்துள்ளதாக சந்தேகம் எழுந்தால் அங்குள்ள தேர்தல் ஆணையங்கள் வாக்களிப்பை பாதி வழியிலேயே நிறுத்த முடியும்.”

“ஆனால் இங்கு புகார்கள் இருந்தால் அவற்றை தேர்தலுக்கு பின்னர் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லுமாறு மட்டுமே தேர்தல் ஆணையம் அறிவுரை கூற முடியும்”, என்றார் அவர்.

மலேசியாவில் சுதந்திரமான, தூய்மையான தேர்தல்களை நடத்துவதற்கு அதன் சட்ட வடிவமைப்பு அனுமதிக்கவில்லை என்றும் அப்துல் ரஷிட் சொன்னார்.

“தேர்தலின் போது எழுப்பப்படும் பிரச்னைகளைத் தீர்க்கவும் தீர்வையும் வழங்குவதற்கும் தேர்தல் சட்டத்தில் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை”, என அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் தீர்க்க முடியாத பிரச்னைகள் நிறைய எங்களுக்கு வருகின்றன. சிறிய தகராறுகளைக் கூட நாங்கள் தீர்க்க முடியாது.”

போலீஸ், மலேசிய ஊழக் தடுப்பு ஆணையம் போன்ற மற்ற அமைப்புக்களுடன் தேர்தல் ஆணையம், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறது. பொருட்களை ஏற்றி இறக்கும் கிடங்குளைப் போன்று நாங்கள் இயங்குகிறோம் என அவர் சொன்னார்.

“உண்மையில் நாங்கள் விரக்தி அடைந்துள்ளோம். மக்கள் எங்களிடம் புகார் செய்கிறார்கள், ஆனால் அதனை போலீசாருக்கு மாற்றி விடுவதைத் தவிர எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. உண்மையில் அந்த அதிகாரம் எங்களிடம் இருக்க வேண்டும்”, என்றும் அப்துல் ரஷிட் குறிப்பிட்டார்.

TAGS: