பக்காத்தான் நெகிரி செம்பிலான் பேரணியை நடத்தும், இலக்கு 50,000 ஆதரவாளர்கள்

பக்காத்தான் ராக்யாட் உள்ளூர் போலீசார் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் வரும் சனிக்கிழமையன்று சிரம்பானில் மாபெரும் பேரணியை நடத்த உறுதி பூண்டுள்ளது.

அதற்கு 50,000 ஆதரவாளர்களை ஒன்று திரட்டவும் அது எண்ணியுள்ளது.

நாடு முழுமைக்குமான பக்காத்தான் விளக்கக் கூட்டங்களின் முதல் கட்டமாக சிரம்பான் பேரணி அமைகின்றது.

அந்தப் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட மாட்டாது என சிரம்பான் ஒசிபிடி சைபுல் அஸ்லி கமாருதின் விடுத்துள்ள அறிக்கையை நெகிரி செம்பிலான் மாநில டிஏபி தலைவர் அந்தோனி லோக் நிராகரித்தார்.

“அனுமதி என்ற கேள்வியே எழவில்லை. ஏனெனில் 2011ம் ஆண்டுக்கான அமைதியான கூட்டச் சட்டத்தின் கீழ் பேரணி அனுமதி என்று எதுவும் கிடையாது. தாம் என்ன பேசுகிறோம் என்பது சைபுலுக்கு தெரியும் என நான் எண்ணவில்லை,” என லோக் நேற்று தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

காலக் கெடுவுக்கு முன்னதாக விண்ணப்பப் பாரத்தை பூர்த்தி செய்ய அந்தப் பேரணி ஏற்பாட்டாளர்கள் தவறி விட்டதால் அதற்குப் போலீஸ் அனுமதி கொடுக்காது என சைபுல் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் பேரணியை நடத்துவதற்கு முன்னதாக போலீசாருக்கு ஏற்பாட்டாளர்கள் தகவல் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே சட்டம் வலியுறுத்துவதை லோக் சுட்டிக் காட்டினார். பக்காத்தான் பத்து நாட்களுக்கு முன்னதாகவே அதனைச் செய்து விட்டது என்றார் அவர்.

“அந்தப் பேரணி தனியார் நிலம் ஒன்றில் நடத்தப்படும். நில உரிமையாளரிடமிருந்து நாங்கள் வாய்மொழியாக அனுமதி பெற்றுள்ளோம்.’

“நாங்கள் திட்டமிட்டபடி அந்தப் பேரணியை நடத்துவோம். நாங்கள் எந்தப் பிரச்னையையும் எதிர்பார்க்கவில்லை. போலீசார் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பர் என நாங்கல் நம்புகிறோம்,’ என ராசா எம்பி-யுமான அவர் தெரிவித்தார்.

காற்பந்துத் திடல் அளவிலான அந்த காலி நிலம் தாமான் சிரம்பான் ஜெயாவில் அமைந்துள்ளது. அது சிரம்பானுக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்படவிருக்கும் விளக்கக் கூட்டங்களில் தொடக்கமாக சிரம்பான் பேரணி அமையும் என்றும் லோக் கூறினார்.

அந்த விளக்கக் கூட்டங்களுக்கு சிகரம் வைத்தது போல அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பெரிய அளவில் பேரணி ஒன்றும் நடத்தப்படும்.

TAGS: