தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை பிரதமரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது

பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல்(பிஎன்) பினாங்கில் வெற்றி பெற்றால் அம்மாநிலத்தை மேம்படுத்தும் திட்டங்கள் எல்லாம் தயார்நிலையில் இருப்பதாகவும் அவை இப்போது திருத்திச் சீர்மைப்படுத்தப்பட்டு வருவதாகவும் மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோ கூறினார்.

இப்போதுள்ள நிலையில், சுற்றுலா, அடக்கவிலை வீடுகள், போக்குவரத்து என எட்டு முக்கிய பொருளாதார துறைகளில் அது கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர் “அவை அதிகம்தான்” என்றார்.

இன்று தெங்கைத் தொடர்புகொண்டபோது, “அந்த வரைவு அறிக்கை, கூட்டரசு அரசாங்கத்தின் உருமாற்றத்திட்டத்துக்கு(இடிபி) ஏற்ப சீர்மைப்படுத்தப்பட்டு வருகிறது”, என்றார்.

நஜிப் அப்துல் ரசாக், பிஎன் தலைவர் என்பதால் அவருடைய ஒப்புதலுக்குக் காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

அது மக்களைக் கவரும் வகையில் இருக்குமா என்று வினவியதற்கு, “அது வெளிவரும் வரையில் காத்திருங்கள்.அப்புறம் தெரியும் அது எவ்வளவு கவர்ச்சிகரமானது என்பது” என்றார்.

கொள்கைஅறிக்கை பற்றிக் கருத்துரைத்த மசீச மகளிர் தலைவி டான் செங் லியாங், அது பினாங்கு மக்கள் அனைவருக்கும் நன்மை அளிப்பதாக இருக்கும் என்றார்.

கொள்கைஅறிக்கை எப்போது வெளியிடப்படும் என்று டானுக்கு உறுதியாக தெரியவில்லை ஆனால், பிஎன் பினாங்கைக் கைப்பற்றினால் அதில் உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றவர் சொன்னார்.

 

TAGS: