Hummer வாகனம் நஸ்ரி-சியா தொடர்புகளைக் காட்டுவதாக பிகேஆர் சொல்கின்றது

சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், வணிகரான மைக்கல் சியா-ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து சியா விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதில் சுய நலன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் இருவரும் நண்பர்கள் எனத் தெரிவதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் சொன்னார்.

நஸ்ரிக்கும் சியாவுக்கும் இடையிலான தொடர்பு சியாவுக்கு சொந்தமான 459,000 ரிங்கிட் மதிப்புள்ள கறுப்பு நிற Hummer SUV  ரக வாகனத்தின் வடிவத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த வாகனத்தை நஸ்ரியின் மூத்த புதல்வரான நெடிம் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

அந்த Hummer SUV  ரக வாகனத்தின் உரிமையாளர் சியா தியன் வோ எனக் கூறும் போக்குவரத்து சம்மன் டிக்கெட் ஒன்றின் பிரதியை ராபிஸி காட்டினார்.

நெடிம் வசித்து வரும் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுப் பகுதியில் அந்த வாகனம் அடிக்கடி தென்பட்டதைக் காட்டும் படங்களையும் (ரகசியமாகப் பெறப்பட்டவை) அவர் வெளியிட்டார்.

“முதலமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஊழல் சம்பவமும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிய சம்பவமும் இங்கே உள்ளன. சபா முதலமைச்சர், சியா ஆகியோரது பெயர்களை விடுவித்த அமைச்சருடைய குடும்பமும் சியா-விடமிருந்து சகாயங்களை பெற்றதற்கான ஆதாரங்களை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம்.”

“அது ஊழல் இல்லை என்றால் வேறு என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. குறைந்தது அவர் அரசியல் தார்மீகப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் சுய நலன் சம்பந்தப்பட்டுள்ளது,” என ராபிஸி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

நஸ்ரி புன்னகை செய்தார்

அதனைத் தொடர்ந்து நஸ்ரியின் கருத்துக்களைப் பெறுவதற்காக அவரது அலுவலகத்துக்கு நிருபர்கள் விரைந்தனர். சுய நலன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அவர் புன்னகையுடன் நிராகரித்தார்.

அந்த விவகாரம் மீது நாடாளுமன்றத்தில் தாம் தெரிவித்த பதில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவற்றிடமிருந்து வந்தது என்றும் அவர் சொன்னார்.

“நான் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து சியா எனக்கு முன்பு விசாரிக்கப்பட்டு என் புதல்வர் அவரது காரை ஒட்டியிருந்தால் அது எனக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.”

“நான் சியா விஷயத்தில் நீதிபதி இல்லை. புலனாய்வாளராகவும் இல்லை. சியாவை விசாரித்தது எம்ஏசிசி ஆகும். நான் நாடாளுமன்றத்தில் பதில் அளித்த அமைச்சர்,” என்றார் நஸ்ரி.

அத்துடன் சியாவுக்கும் என் புதல்வருக்கும் இடையில் நிகழ்வது என் வேலை அல்ல. ஏனெனில் என் புதல்வர்  வயதானவர் ( adult).

சியா நெடிமுக்கு கார் ஒன்றை வழங்கினார் என ராபிஸி சொல்வது உண்மையா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு அவர்கள் இருவரிடம் மட்டுமே கேட்க வேண்டும் என்றும் நஸ்ரி சொன்னார்.

என்றாலும் சியாவைத் தமக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். தாம் ஒரு முறை அவருடன் டுபாய்க்கு தமது சொந்தச் செலவில் பயணம் செய்ததாகவும் நஸ்ரி தெரிவித்தார்.

“எனக்கு சியாவைத் தெரியும். நான் அது குறித்துக் கவலைப்படவில்லை,” என்றார் அவர்.

TAGS: