கர்பால்: நான் கூறியது தேசநிந்தனையானது என்று பொருள்படாது

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பேராக் மாநில ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் தாம் கூறியது தேசநிந்தனைக்கு ஒப்பானதாகாது என்று மூத்த வழக்குரைஞர் கர்பால் சிங் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.

“நான் சுல்தானின் தனிச்சிறப்புரிமை மீது கேள்வி எழுப்பவில்லை, அவர் நடந்து கொண்ட செயல்முறையைத்தான்”, என்று அவரது வழக்குரைஞர் கோபிந் சிங் டியோவின் கேள்விக்கு பதிலாகக் கூறினார்.

கர்பால் எழுப்பிய “செயல்முறை” குறித்த கேள்வி அரண்மனையில் சங்காட் ஜெரிங், ஜெலாப்பாங் மற்றும் செலுத்தோங் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர்களின் விசுவாசம் குறித்து சுல்தான் விசாரித்த முறை பற்றியதாகும். அது சரியான முறையல்ல என்பது கர்பாலின் வாதம்.

இந்நாட்டில், அரசமைப்புச் சட்டம் ஒப்புயர்வற்றது. எவரும், ஆட்சியாளர்கள் உட்பட, அரசமைப்புச் சட்டத்தைவிட உயர்ந்தவர் அல்லர் என்று கர்பால் கூறினார்.

அவரது சிந்தனையில் அவர் கூறியது தேசநிந்தனையானதா என்று கர்பாலிடம் கோபிந் சிங் வினவினார்.

கர்பால் அவரது தற்காப்பு வாதத்தின் முதல் நாளான இன்று சாட்சியமளித்தார்.

மிக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் இவ்வழக்கில் லாஏசியாவின் கண்காணிப்பாளர்களும் வழக்குரைஞர் மன்றத்தின் சார்பில் பால்ஜிட் சிங் சிதுவும் இருந்தனர்.

இந்த வழக்கை Inter-Parliamentary Unionனும் கண்கானித்து வருகிறது. அதனை முன்னிலை வழக்குரைஞர் (Queen’s Counsel) மார்க் டிரோவெல் பிரதிநிதிக்கிறார்.

2009 ஆம் ஆண்டு பேராக் மாநில ஆட்சிக் கவிழ்ப்பு நெருக்கடியில் பேராக் சுல்தானின் செயல்பாட்டிற்கு எதிராக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று டிஎபியின் தேசியத் தலைவரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான கர்பால் பெப்ரவரி 6, 2009 இல் அவரது ஜாலான் புடு லாமா அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூறியிருந்தார்.

கர்பால் அவ்வாறு கூறியதற்காக தேசியநிந்தனைச் சட்டம் 1948, செக்சன் 4(1)(b) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் உயர்ந்தபட்சமாக ரிம5,000 அபராதம் அல்லது மூன்றாண்டு சிறைதண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“நான் தெரிவித்தது சட்டக் கருத்துதான்”

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் தாம் ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக கர்பால் கூறினார்.

“நான் அவ்விவகாரம் சம்பந்தமான சட்டக் கூறுகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பினேன்”, என்று கோபிந்தின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் கர்பால்.

ஜூன் 11, 2010 இல் கர்பாலுக்கு எதிரான வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்று தீர்ப்பளித்து உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்மான் அப்துல்லா அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விதலை செய்தார்.

ஆனால், சட்டத்துறை தலைவரின் அலுவலகம் செய்து கொண்ட மனுவை ஏற்றுக்கொண்ட மேல்முறையீடு நீதிமன்றம் இவ்வாண்டு மார்ச் 26இல் கர்பால் தற்காப்பு வாதம் புரியுமாறு உத்தரவிட்டது.

கர்பாலை அவரது மகன்கள் கோபிந், ராம்கர்பால் மற்றும் ஜக்தீப் ஆகியோருடன் முன்னாள் வழக்குரைஞர் மன்ற தலைவர் பரம் குமரசாமியும் (இடம்), ஆர்எஸ்என் ராயரும் பிரதிநிதித்தனர்.

TAGS: