நஸ்ரி அரசியலில் ஒரு தொல்லையாக மாறலாம் என்கிறது ஜேஎம்எம்

வழக்கமாக அரசாங்கத்தை ஆதரித்தே பேசும் அமைப்பான ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் அரசியலில் ஒரு தொல்லையாக விளங்கும் சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அமைச்சரின் குடும்பத்தாருக்கும் வெட்டுமரத் தொழில் அதிபர் மைக்கல் சியாவுக்குமுள்ள தொடர்புகளை பிகேஆர் அம்பலப்படுத்தி இருப்பதை அடுத்து அது இவ்வாறு கூறியது.

“அவரது குடும்பத்தார் பற்றிய இரசியங்கள் (பிகேஆர் தலைவர்) அன்வார் இப்ராகிமிடம் இருக்குமானால் அவர் (நஸ்ரி) பிஎன்னுக்கு ஓர் அரசியல் தொல்லையாகி விடலாம்”, என்று ஜேஎம்எம் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.

சியா அவரது சொகுசு ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வாகனம் ஒன்றை நஸ்ரியின் மகன் நெடிமுக்கு இரவல் கொடுத்திருப்பதாக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கூறியிருப்பதைக் கருத்தில்கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த ரிம459,000 மதிப்புள்ள ஹம்மர் வாகனம் நெடிமின் ஆடம்பர அடுக்குமாடிக் கட்டிடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் நிழற்படங்களையும் ரபிஸி காட்டினார்.

இதுபோன்ற விவகாரங்களை வைத்து பிகேஆர் “அரசியல் மிரட்டலில்” ஈடுபட்டு காரியங்களைச் சாதித்துக்கொள்ளப் பார்க்கலாம் என்று அஸ்வண்டின் எச்சரித்தார்.

அரசாங்கத்துக்கு ஓர் இக்கட்டை உண்டாக்கும் பிகேஆரின் செயல்,  விசாரணைக்கு இலக்காகியுள்ள சுவாராமைக் காப்பாற்றும் முயற்சியாகக்கூட இருக்கலாம்.

சுவாராம்மீது  நஸ்ரி தெரிவித்த கருத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு நிதிஉதவி பெறுவது குற்றமல்ல என்றவர் கூறியது சுவாராமைப் பாதுகாக்கும் முயற்சிபோலத் தெரிகிறது.

“அது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். அப்படி அல்லாமலும் இருக்கலாம்”, என்று கூறியவர் மேலும் விவரிக்கவில்லை.

“ஊழல் வழக்குகளை மேற்பார்வையிடும் அமைச்சர் தம்மளவில் தூய்மையான தோற்றம் கொண்டவராகவும் மதிக்கப்படுவபராகவும் இருத்தல் வேண்டும்”, என்றாரவர்.

TAGS: