பினாங்கு, தாமான் மாங்கிஸ் நிலத்தை விற்க முடியும் என்கிறார் கர்பால்

ஜாலான் ஜைனல் அபிடின் தாமான் மாங்கிஸ் நிலப் பட்டா வேறு எந்தத் தரப்புக்கும் மாற்றி விடப்பட மாட்டாது என்ற நிபந்தனையுடன் பினாங்கு அரசாங்கம் மாநில பிஎன் -னுக்கு விற்க முடியும்.

அந்த நிலத்துக்கான ஏலத்தில் வெற்றி பெற்ற Kuala Lumpur International Dental Centre (KLIDC) அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காது என்ற நிபந்தனையுடன் அது செய்யப்படலாம் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறினார்.

என்றாலும் அந்தச் சொத்துக்கான முழுப் பணத்தையும் KLIDC செலுத்தி விட்டதால் அது மாநில அரசு மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

“நடவடிக்கை எடுப்பது அந்த நிறுவனத்தைப் பொறுத்தது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருப்பதால் மாநில அரசு மீது வழக்குப் போடுவதற்கு KLIDC-க்கு உரிமை உண்டு,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

அந்தச் சொத்து ஏற்கனவே தனியார் துறைக்கு விற்கப்பட்டு விட்ட நிலையில் அந்த நிலத்தை விற்பனை செய்ய மாநில அரசாங்கம் முன் வந்துள்ளது பற்றி வினவப்பட்ட போது கர்பால் அவ்வாறு பதில் அளித்தார்.

பினாங்கு அரசாங்கம் ஏற்கனவே KLIDC-க்கு விற்பனை செய்யப்பட்டு விட்ட நிலத்தை பிஎன் -னுக்கு விற்பனை செய்வதின் மூலம் மாநில அரசாங்கம் ஆபத்தை ஏற்படுத்திக் கொள்வதாக அவர் கருதுகிறார்.

கடந்த அக்டோபர் 3ம் தேதி பிஎன் இளைஞர்கள் 224,073 ரிங்கிட்டை செலுத்தினர். அது அந்த நிலத்தின் மொத்த விலையான 22 மில்லியன் ரிங்கிட்டில் ஒரு விழுக்காடு ஆகும். அது மாநில அரசாங்கம் விற்க முன் வந்த நிலத்துக்கான earnest அல்லது நம்பிக்கைத் தொகையாகும்.

0.45 ஹெக்டர் பரப்புள்ள தாமான் மாங்கிஸ் நிலம் முதலில் மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாநில அரசாங்கம் 19 மாடி ஹோட்டல், ஆறு மாடி மருத்துவமனை, ஐந்து மாடி கார் நிறுத்துமிடம் ஆகியவற்றைக் கட்டுவதற்காக மேம்பாட்டாளர் ஒருவருக்கு  விற்றது

 

TAGS: