இண்ட்ராப்: பிஎன்னைக் கவிழ்க்க பக்காத்தானுடன் புது உறவு

இண்ட்ராப்-எச்ஆர்பி, பக்காத்தான் ரக்யாட்டுடனாக கருத்துவேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு அடுத்த பொதுத்தேர்தலில் அம்னோ-பிஎன்னைப் பதவி இறக்க கூட்டு வியூகம் வகுக்கும் தருணம் வந்துவிட்டதாகக் கூறுகிறது.

“மீண்டும் புதிதாக தொடங்கப் போகிறோம். இண்ட்ராபின் அணுகுமுறை ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றிருக்கும்”, என்று இண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் டபிள்யு. சாமுலிங்கம் இன்று கோலாலம்பூர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“பக்காத்தானுடன் பிரச்னைகள் இருந்தது உண்மைதான்….ஆனால் சர்ச்சையிட்டுக்கொள்ள இது நேரமல்ல. வேறுபாடுகளை மறந்து புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான வியூகத்தை வகுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது”, என்று அதன் தேசிய ஆலோசகர் என்.கணேசன் கூறினார்.

இண்ட்ராப் தனித்து நின்று ஆளும்கட்சியை ஒன்றும் செய்ய இயலாது என்பதைக் கணேசன் ஒப்புகொண்டார். அதேபோல் பக்காத்தானும் “தன்னளவில் அம்னோவைப் பதவி இறக்க முடியாது என்பதை அண்மைய நிகழ்வுகள்” காண்பிப்பதாக கணேசன் குறிப்பிட்டார்.

கடந்த கால வாக்களிக்கும் பாங்கை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்விலிருந்து இந்திய வாக்குகள் 20-திலிருந்து 50விழுக்காடுவரை பக்காத்தானைவிட்டு விலகிச் சென்றால் பக்காத்தான் 18 நாடாளுமன்ற இடங்களையும் சிலாங்கூர், பேராக், கெடா ஆகிய மாநிலங்களையும் இழக்க நேரும் என்பது தெரிய வருவதாக  கணேசன் கூறினார்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பக்காத்தானை இறுக்கமாக ஒட்டவைத்துக்கொண்டிருக்கும் “பசை” காய்ந்து,  கட்சிகளுக்குள் கருத்துவேறுபாடுகள் தலைதூக்கிக் கூட்டணியே உடைந்து போகலாம் என்றவர் கூறினார்.

“பொது எதிரி”

இண்டாராபுக்கும் பக்காத்தானுக்கும், “சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் அரசு ஆதரவுபெற்ற இன, சமய மேலாதிக்கக் கொள்கைகளை ஒழிக்க” அம்னோவை ஆட்சியிலிருந்து இறக்கும் “பொதுவான குறிக்கோள்” உண்டு என்று கணேசன் குறிப்பிட்டார்.

அந்தக் குறிக்கோளை அடைய பக்காத்தானுடன் இணைந்து செயல்பட இண்ட்ராபால் முடியும் என்றவர் நம்புகிறார். 

பக்காத்தானுக்குச் சீனர்களின் ஆதரவு கூடியுள்ளது என்றாலும் அதைக் கொண்டு மலாய்க்காரர் வாக்குகளில் ஏற்பட்டுள்ள இழப்பையும்  விலகிச் செல்லக்கூடிய இந்தியர் வாக்குகளையும் ஈடு செய்ய முடியாது என்று கணேசன்(வலம்) கூறினார்.

நடந்து முடிந்த ஐந்து இடைத்தேர்தல்களின் வாக்களிப்புப் பாங்கை ஆராய்ந்ததில், இந்தியர் வாக்குகளில் 50 விழுக்காடு விலகிச் செல்வதுகூட முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகிறது.

உதாரணத்துக்கு மெர்லிமாவ் இடைத் தேர்தலில், இந்தியர் வாக்குகள் 40-திலிருந்து 50 விழுக்காடு விலகிச் சென்றதால் பக்காத்தான் சட்டமன்ற இடத்தைப் பறிகொடுத்தது.

சிலாங்கூரில் பிஎன்னுக்கு ஆதரவான வாக்குகளில் 10 விழுக்காடு அதற்கு எதிராக திரும்புமானால் மாற்றரசுக் கட்சிகளுக்கு மேலும் ஆறு இடங்கள் கிடைக்கும், 20 விழுக்காடு வாக்குகள் எதிராக திரும்பினால் பக்காத்தானுக்கு மேலும் 10 இடங்கள் கிடைக்கும்.

இந்தியர் வாக்குகள் பக்காத்தானுக்கு ஆதரவாக திரும்பினால் எட்டு அமைச்சர்கள் தோல்வியுறலாம் என்பதையும் இண்ட்ராப் ஆய்வுகள் காண்பிக்கின்றன. தற்காப்பு அமைச்சர் அஹமட் ஸாஹிட் ஹமிடி(பகான் டத்தோ), போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா(லூமுட்), பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ்(பாடாங் ரெங்காஸ்), ஊராட்சி அமைச்சர் சோர் ச்சீ ஹியோங்(அலோர் ஸ்டார்), மனிதவள அமைச்சர்(செகாமாட்), சுற்றுலா அமைச்சர்( இங் யென் யென்(ராவுப்), இரண்டாவது நிதி அமைச்சர் ஹூஸ்னி ஹனாட்ஸ்லா(தம்பூன்), விவசாயம், விவசாயம்-சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமார்(தஞ்சோங் காராங்) ஆகியோரே அந்த எண்மருமாவர்.

கடந்த ஐந்து இடைத் தேர்தல்களில் இண்ட்ராப் பரப்புரையில் ஈடுபடாமல் ஒதுங்கி நின்றதால் பக்காத்தானுக்கு இந்தியர் வாக்குகள் கிடைக்கவில்லை. அதுவே அதன் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது என்றார் கணேசன்.

“12வது பொதுத்தேர்தலில் செய்ததுபோல், அம்னோவை வெளியேற்ற வாக்களியுங்கள் என்று இண்ட்ராப் கேட்டுக்கொண்டால் இந்தியர்கள் அதற்குச் செவிசாய்ப்பார்கள் என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை.”

ஏனென்றால், தங்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பது இண்ட்ராப்தான் என்பதை இந்தியர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றவர் குறிப்பிட்டார்.

“பக்காத்தானால் இந்திய சமூகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை”, என்றாரவர்.

அப்படியானால் முன்பு பக்காத்தானிடம் முன்வைத்த கோரிக்கைகள் பற்றி இண்ட்ராப் மீண்டும் பேச்சுநடத்துமா என்று வினவியதற்கு அது பற்றி இப்போதைக்குக் கருத்துரைக்க இயலாது என்றவர் பதிலிறுத்தார்.

13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானைப் பொறுத்தவரை நம்பிக்கை ஒளி தெரியவில்லை.அழிவுதான் தென்படுகிறது. என்றாலும் உதவிக்கரம் நீட்ட இண்ட்ராப் தயாராக இருப்பதாய் அவர் சொன்னார்.

TAGS: