-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், நவம்பர் 14, 2012.
குற்றவாளி திருந்துவதற்கு நிபந்தனை விதிப்பதா? பத்துமலைக்கு தீங்கிழைத்த பாரிசான் மக்களை பக்கதானுக்கு எதிராகத் தூண்டிவிட முயற்சிப்பதா? இதனைச் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளவர் பிரதமர் நஜிப். அவர் பத்துமலையை காப்பாற்ற புதிய நிபந்தனை விதிக்கிறார். நிபந்தனை விதிக்கும் அருகதை அவருக்கு இல்லை. மாறாக, அம்னோவும் பாரிசானும் பத்துமலை திருதலத்திற்கு இழைத்துள்ள கெடுதலுக்கு இந்திய சமூகத்திடமும் அனைத்து மலேசிய மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
பத்துமலை முருகன் திருத்தலத்தை அழிக்க, முருகனின் சிலைக்கு சிறுமை ஏற்படுத்த 29 மாடி கொண்டோ கட்டுமான திட்டத்தை படு அவசரமாக அங்கீகரித்ததோடு அதே வேகத்தில் மேம்பாட்டு பணிகளுக்கும் அங்கீகாரமளித்த செலயாங் நகராட்சிமன்ற முன்னாள் மஇகா மற்றும் கெராக்கன் உறுப்பினர்களோடு நஜிப் தலைவராக இருக்கும் அம்னோவின் இரண்டு உறுப்பினர்களும் அடங்குவர். இந்தத் திட்டத்தை அங்கீகரிப்பதில் அவ்விருவரும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
அந்த முன்னாள் நகராட்சிமன்ற உறுப்பினர்களின் செயல்கள் எதார்த்தமாக நடக்கவில்லை என்பதற்கு பத்துமலையை சுற்றி எழுந்துள்ள எண்ணற்ற மேம்பாட்டுத் திட்டங்களே சான்றாகும்.
தேவஸ்தான தலைவர் ஆர். நடராஜா அறிக்கையில் கூறியுள்ளதைவிட அதிகப்படியான கேடுகளை கறைபடிந்த கைகளும், பேராசை கொண்ட நெஞ்சங்களும் செய்துள்ளதை அங்கு தெளிவாகக் காண முடியும். உண்மையைத் தெரிந்து கொள்ள பிரதமர் நஜிப்பே பத்துமலையை சுற்றி வலம் வரலாம்.
அதன் பின்னர், அந்த மலையைச் சுற்றி எவ்வளவு மேம்பாடுகள், எத்தனை உயரமான கட்டடங்கள் மற்றும் வீடமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது அவருக்கு புரியும்.
அழிக்கும் திட்டம்
பத்துமலையை அழிக்கத் திட்டம் உருவாகி நீண்ட காலமாகிவிட்டது. அதனை ஓர் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர் அம்பலப்படுத்தியிருந்தால் அதை அரசியல் என்று கூறி அவ்விவகாரத்தை அனைத்து அரசு சார்பு ஊடகங்கள் ஒதுக்கி ஒடுக்கியிருக்கும்.
ஆனால், மத்திய அரசுக்கு சாதகமான கோயில் தலைவரே அதனைக் கிளப்பி விட்டுள்ளார். அதனால், இச்செய்தி பல கயவர்களின் உண்மையான நிறத்தை ஊருக்கும் உலகிற்கும் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 1974 ஆம் ஆண்டு தொடங்கி 1980 ஆம் ஆண்டு வரையில் பத்துமலையை காப்பாற்ற வேண்டும் என்று போராட்டங்களைத் துவக்கிய பல அமைப்புகளும், பத்துமலை கோயில் நிருவாகமும், நாளிதழ்களும், இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்களும் கடுமையாகப் பாடுபட்டனர்.
ஆக, பத்துமலையை, அங்கு காணும் அரிய தாவரங்களை, அபூர்வ உயிரினங்களை, பத்துமலை திருக்கோயிலை, முருகன் சிலையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்மையானதாக இருந்திருந்தால், பத்துமலையை சுற்றியுள்ள இதர பகுதிகள் மேம்பாடும் கண்ட போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மேம்பாட்டு வேலைகள் பத்துமலை ஆலயத்தின் கதவைத் தட்டும் வரையில், அடுத்தப் பொதுத் தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் வரையில் காத்திருக்க வேண்டியதில்லை.
மேலும், சுற்றுச்சூழல் இலாகாவின் அறிக்கையைப் புறந்தள்ளி விட்டு இவ்வளவு திட்டங்களையும் அனுமதித்த அம்னோவின் நோக்கம் என்ன?
மலேசிய இந்துக்களின் புனிதத் தலமான பத்துமலையை காப்பாற்ற திட்டமா? இல்லை, இல்லவே இல்லை! பத்துமலையை அழிக்கத் தீட்டப்பட்ட கபடமான திட்டம்!
அம்னோவின் ஆட்சி இன்றுவரையில் நீட்டிருந்தால், இத்திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை!
மீண்டும் அம்னோ, பாரிசான் ஆட்சி அமைந்தால், பக்கத்தான் நிறுத்தியுள்ள இக்கட்டுமான திட்டத்தை மீண்டும் தொடரமாட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?
பத்துமலையைக் காக்க வேண்டும், பத்துமலை திருக்கோயிலை காக்க வேண்டும், முருகன் சிலையைக் காக்க வேண்டும் என்று மாரியம்மன் தேவஸ்தான தலைவர் ஆர். நடராஜாவும், இந்திய சமூகம் ஓரங்கட்டப்பட்ட சமூகம் என்பதில் சந்தேகமே இல்லை என்று கூறிய மஇகா தலைவர் ஜி. பழனிவேலும் விடுத்துள்ள திடீர் அறிவிப்புகளுக்கும், 13 ஆவது பொதுத் தேர்தலுக்கான தேதி குறிப்பிடப்படவுள்ள இவ்வேளைக்கும் தொடர்பு உண்டா, இல்லையா? இதனை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான் என்று நாங்கள் முன்பே கோரிக்கை விடுத்துள்ளோம்.
நேற்று (நவம்பர் 13) பத்துமலையில் பிரதமர் நஜிப் ஆற்றிய உரை அதனை உறுதிப்படுத்தி விட்டது.
பத்துமலைக்கு தீங்கு விளைவித்தவர்கள், அதற்காக இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள், இந்தியர்களுக்கு புதிய நிபந்தனை விதித்திருப்பது இந்தியர்களை ஏமாளிகளாகக் கருதும் அம்னோ-பாரிசானின் அரசியல் ஆணவம் இன்னும் மாறவேயில்லை என்பதைக் காட்டுகிறது.
மலேசிய இந்தியர்களும் அம்னோ-பாரிசானை நம்ப இனிமேலும் தயாராக இல்லை என்பதை அங்கு வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கை நம்பிக்கை நாயகன் நஜிப்புக்கு உணர்த்தியுள்ளதைக் காட்டுகிறது.
இருந்தும், பாரிசான் அரசாங்கம் பத்துமலைக்கு இழைத்த தீமைக்கு பரிகாரமாக சிலாங்கூர் பக்கத்தான் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று சற்றும் வெட்கம் இன்றி இந்தியர்களுக்கு நஜிப் கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்துமலைக்கு ஆபத்து என்று எந்த ஒரு முறையான புகாரும் மாநில அரசாங்கத்திடம் செய்யாத ஆர். நடராஜா, அவசரமாக செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் பத்துமலையில் கூடி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று கூறிய அவருக்கும், மஇகாவுக்கும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டம் படுதோல்வியில் முடிந்தது என்பது தெரியும். அன்று அங்கு கூடிய 300 க்கும் குறைவான மஇகா உறுப்பினர்களின் எண்ணிக்கையே அதனை உறுதிப்படுத்தி விட்டது.
இருப்பினும், ஆளுங்கட்சியின் தலைவரும், பிரதமருமான நஜிப் ஒரு மழுங்கிய ஆயுதத்தைக் கொண்டு பாக்கத்தானை தாக்கி ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பது வேடிக்கையாகவுள்ளது.