கோத்தா பாருவில் நடைபெறும் தேசிய பாஸ் இளைஞர் மாநாட்டில் இன்று பின்னேரம் கட்சியின் கொள்கை ஏடான ஹராகாவைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர்கள் கொண்டுவரும் அத்தீர்மானம், ஹராகாவின் செய்தி வெளியிடும் தரம் தாழ்ந்து அது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது.
செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட அத்தீர்மானத்தின் பிரதி ஒன்று, ஹராகா அது உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைவிட்டு விலகிச் சென்றுவிட்டதாக கூறியது.
எனவே, அது சீரமைக்கப்பட வேண்டும் என்றது கேட்டுக்கொண்டது.
“அச்செய்தித்தாள் பாஸின் உண்மையான இலட்சியங்களை விளக்கும் வகையில் அதன் ஆசிரியர்குழுவைத் திருத்தி அமைக்க வெண்டும் பாஸின் மத்திய செயலவையைக் கேட்டுக்கொள்கிறோம்”,என்றந்த தீர்மானம் கூறிற்று.
பாஸின் மத்திய செயலவை ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்து ஹராகாவிலும் அதன் இணைய செய்தித்தளமான ஹராகாடெய்லியிலும் இடம்பெறும் செய்திகள் கட்சியின் கொள்கைக்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.