பினாங்கு மாநில அரசாங்கத்தின் உத்தரவு ஏதுமில்லாமல் ஜார்ஜ் டவுன் லெங்கோக் சுங்கை குளுகோரில் 72 வயதான ஒருவர் தங்கியிருந்த வீட்டை இடித்ததற்காக பினாங்கு நகராட்சி மன்றம் கடுமையாக சாடப்பட்டுள்ளது.
நகராட்சி மன்றத்தின் தன்மூப்பான நடவடிக்கையைக் கண்டித்த எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பெரிய வீடுகள் உடைக்கப்படுவதிலிருந்து தப்பி விடுகின்றன என்னும் எண்ணத்தை அந்த நடவடிக்கை மக்களிடையே ஏற்படுத்தி விடக் கூடும் எனச் சொன்னார்.
நிர்வாக நடைமுறைப் பிர்சனைகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன என்றார் அவர்.
“இருந்தாலும் அந்த வீடு உடைக்கப்பட்டதில் பக்காத்தான் ராக்யாட் நகராட்சி மன்ற உறுப்பினர் யாரும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்தால் அவருடைய தவணைக் காலம் நீட்டிக்கப்படாமல் இருப்பதை நான் உறுதி செய்வேன்.”
“ஏனெனில் அந்த நபர் கீழ் நிலையில் உள்ள மக்களுடைய பிரச்னைகளை உணரவில்லை,” எனக் குறிப்பிட்ட அன்வார், மாநில அரசாங்கம் அதனை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அவர் ஜார்ஜ் டவுனில் மாநில அளவிலான மால் ஹிஜ்ரா கொண்டாட்டங்கள் தொடர்பில் “இஸ்லாமும் மலாய்க்காரர்களும்: உம்மாவின் கௌரவம், மக்களுடைய இறையாண்மை” என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசிய பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.
அன்வார் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
அந்த நிகழ்வில் பினாங்கு யாங் டி பெர்துவா நெகிரி அப்துல் ரஹ்மான் அபாஸ், துணை முதலமைச்சர் 1 மான்சோர் ஒஸ்மான், சமய விவகாரங்கள், உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகாரங்கள் ஆகியவற்றுக்கான ஆட்சி மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் அபுல் காசிம், மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் அப்துல் ஹலிம் ஹுசேன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
72 வயதான மரியாம் தாஹிர் என்பவருக்குச் சொந்தமான நூறு ஆண்டுகள் பழமையான வீடு ஒன்றின் முன்புறத்தை புலாவ் பினாங்கு நகராட்சி மன்றம் உடைத்து விட்டதாக அண்மையில் நாளேடு ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அது உடைக்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு எந்த முன்னறிவுப்பும் கொடுக்கப்படவில்லை.
பெர்னாமா