பினாங்கு மாநில முதலாவது துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான் பிகேஆர் வேட்பாளராக நிபோங் தெபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அந்த இடத்தை 2008 தேர்தலில் தான் தீ பெங் வென்றார். ஆனால் அவர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிகேஆர் கட்சியிலிருந்து விலகி சுயேச்சை எம்பி என தம்மைப் பிரகடனம் செய்து கொண்டார்.
முன்னாள் கெராக்கான் இளைஞர் தலைவருமான தான் பின்னர் கீத்தா கட்சியில் இணைந்தார். இவ்வாண்டுத் தொடக்கத்தில் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பிகேஆர்-கட்சியிலிருந்து விலகிய இன்னொரு உறுப்பினரான ஜைட் இப்ராஹிம் கீத்தா கட்சியைத் தோற்றுவித்தார்.
“தான் -ஐ தேர்வு செய்ததற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த முறை அனுபவம் வாய்ந்த ஒருவரை நாம் தேர்வு செய்வோம்,” என அன்வார் நேற்றிரவு சுங்கை ஊடாங்கில் 2000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட செராமா ஒன்றில் கூறினார்.
மான்சோர் பெரும்பாலும் மாநில அம்னோ தலைவருமான ஜைனல் அபிடின் ஒஸ்மானுடன் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2008ல் நிபோங் தெபால் எம்பி-யாக இருந்த ஜைனல் அபிடின் தான்-இடம் 3087 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
நாம் மாநில அம்னோ தலைவரை எதிர்நோக்க வேண்டியுள்ளதால் நாம் நமது மாநில பிகேஆர் தலைவர் மான்சோரை அங்கு அனுப்புவோம்,” என அன்வார் சொன்ன போது பலத்த கைதட்டல் எழுந்தது.
“நாம் அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை வெற்றி கொள்ளும் போது மான்சோர் நமக்கு உதவ வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.”
மான்சோர் இரண்டு இடங்களில் போட்டியிடுவாரா ?
பெனாந்தி தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினருமான மான்சோர், நாடாளுமன்றத் தொகுதிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பினாங்கை பக்காத்தான் தக்க வைத்துக் கொள்ளுமானால் துணை முதலமைச்சர் பொறுப்புக்கு அவர் மீண்டும் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்றாலும் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளருமான அவர் தமது பெனாந்தி தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளவும் நிபோங் தெபாலை மீண்டும் கைப்பற்றவும் நிறுத்தப்படலாம்.
பிகேஆர் கட்சியின் ரகசியக் கூட்டம் ஒன்றின் ஒலிப்பதிவுகள் வலைப்பதிவிலும் பின்னர் டிவி3-லும் வெளியானதைத் தொடர்ந்து மான்சோர் அண்மையில் சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
முதலமைச்சர் லிம் குவான் எங்-கை கர்வம் பிடித்தவர், ‘தொக்கோங்’ என வருணித்ததை அந்த ஒலிப்பதிவுகள் காட்டின.
நேற்றைய நிகழ்வில் லிம், மான்சோர், பிகேஆர் துணைத் தலைவர் லாவ் சூ கியாங் , Solidariti Anak Muda Malaysia அமைப்பின் தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் ஆகியோரும் பேசினார்கள்.