பிஎன் உண்மையான அரசியல் மாற்றத்துக்கு தயாராக இல்லை என்கிறார் ஒர் ஆய்வாளர்

2008 பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்ததற்கு அம்னோ வழி நடத்தும் பிஎன் உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரும் ஆற்றலைக் கொண்டிராததே காரணம் என புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

“மலேசியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை” என்னும் தலைப்பைக் கொண்ட அந்தப் புத்தகத்தை ஜோஹான் சரவணமுத்துவும் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ் என்பவரும் தொகுத்துள்ளனர். கடந்த தேர்தலில் பிஎன் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்தற்கான காரணங்களை ஜோஹான் ஆய்வு செய்துள்ளார்.

அவர் சிங்கப்பூரில் இயங்கும் தென் கிழக்காசிய ஆய்வியல் கழகத்தின் முதுநிலை ஆய்வாளரும் ஆவார்.

கூடுதலான வெளிப்படைப் போக்கு, பொறுப்பு ஆகியவற்றுக்கும் மனித உரிமைகள், சட்ட ஆட்சி, சமூக நீதி ஆகிய ஜனநாயக பண்புகளுக்கும் வாக்காளர்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை பக்காத்தான் ராக்யாட்டின் சீர்திருத்தக் கொள்கைகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அப்துல்லா அரசாங்கம் சீர்திருத்தங்களுக்கான தனது சொந்த பதிப்புக்களைக் கூட அமலாக்கத் தவறி விட்டது. அது அப்துல்லவின் சொந்த அரசியல் சீர்குலைவுக்கு வழி வகுத்து விட்டது.”

“ரிபார்மசி போராட்டத்தின் போது மாற்று ஊடகங்கள் வாசகர் எண்ணிக்கையில் முக்கிய நாளேடுகளுக்கு இணையாக இருந்தன அல்லது அவற்றைப் பின்னுக்குத் தள்ளி விட்டன.(எடுத்துக்காட்டுக்கு இணைய பத்திரிக்கையான மலேசியாகினி),” என ஜோஹான் குறிப்பிட்டார்.

2008 தேர்தலில் பிஎன் அடைந்த மோசமான இழப்புக்களுக்கு- நாடாளுமன்றத்தில் தனது பாரம்பரிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது- வழிகோலிய மற்ற முக்கியமான அம்சங்களையும் அந்த அரசியல் ஆய்வாளர் அடையாளம் கண்டுள்ளார்.

“செலுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையிலும் பிஎன் அரசாங்கம் தோல்வி கண்டது. அத்துடன் நான்கு மாநிலங்களை இழந்ததுடன் ஒரு மாநிலம் தொடர்ந்து எதிர்க்கட்சியிடமே இருந்தது. தீவகற்ப மலேசியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பிஎன் அரசாங்கத்திடமிருந்து வாக்குகள் திசை மாறிச் சென்றன.”

“மலேசியா நாடாளுமன்ற இரண்டு கூட்டணி முறையை நோக்கி அடி எடுத்து வைத்தது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். உண்மையில் அந்த இரண்டு கூட்டணி முறை மாநில அளவிலான ஆளுமையிலும் நிலை பெற்றது.’

அந்தப் புத்தகம் அடுத்த வாரம் வெளியிடப்படும்.

 

TAGS: