58வது பாஸ் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள முஸ்லிம் அல்லாத ஒரே பேராளரான கே தீபகரன் பாஸ் கட்சியின் மிதவாதப் போக்கைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
அந்தக் கட்சி தீவிரவாதக் கட்சி என பிஎன் குற்றம் சாட்டுவதை அவர் நிராகரித்தார்.
பாஸ் கட்சிக்கு எதிரான எண்ணம் 2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் படிப்படியாகக் குறைந்து விட்டதாக பாஸ் ஆதரவாளர் பிரிவுச் செயலாளருமான அவர் சொன்னார்.
“இதற்கு முன்னர் இந்தியர்களும் சீனர்களும் பாஸ் கட்சியில் சேர்ந்தால் இஸ்லாத்துக்கு மாற வேண்டியிருக்கும். சுண்ணத்துச் செய்து கொள்ள வேண்டியிருக்கும் என குற்றம் சாட்டப்பட்டு வந்தது.”
“நாம் பாஸ் கட்சியை ஆதரித்தால் இந்துக்களுக்கும் சீனர்களுக்கும் பிரார்த்தனை செய்வதற்கு இடம் இருக்காது என்றும் கூறப்பட்டது. இப்போது என்னவாயிற்று,” என தீபகரன் வினவினார்.
“தோக் குரு கூட (பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்) கோயில்களுக்கு நுழைந்து எங்களுடன் (முஸ்லிம் அல்லாதவர்கள்) ஒரே மேசையில் அமருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை,” அவர் இன்று காலை கோத்தாபாருவில் நிகழும் அந்தக் கூட்டத்தில் கூறினார்.
தாங்கள் தொடர்ந்து முஸ்லிம் அல்லாதவராக இருந்த போதிலும் இஸ்லாம் குறித்த கல்வி மூலம் முஸ்லிம் அல்லாதார் பாஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக விளக்கிய அவர் அரபுச் சொற்களைப் பயன்படுத்தியது பேராளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
பிஎன் தங்களை புறக்கணித்து விட்டதால் முஸ்லிம் அல்லாதார் பாஸ் கட்சியை ஆதரிப்பதாக தீபகரன் குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் ஆட்சியைக் கைப்பற்றுமானால் பெரும்பாலும் இந்தியர்களாகவும் சீனர்களாகவும் இருக்கும் 300,000க்கும் மேற்பட்ட நாடற்ற மலேசியர்களுடைய அவலத்தைப் போக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“பக்காத்தானுக்கு சீனர் ஆதரவு வலுவாக உள்ளது. ஆனால் இந்தியர் ஆதரவு சிறிதளவு குறைந்துள்ளது. பக்காத்தானுக்கு அந்த ஆதரவை மீண்டும் கொண்டு வர நாங்கள் உறுதி அளிக்கிறோம்.”
“நாங்கள் இஸ்லாத்தின் வீரர்கள். இஸ்லாம் அனைவருக்கும் உரியது. இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் குறைப்பதே பாஸ் ஆதரவாளர் பிரிவின் நோக்கமாகும்,” என தீபகரன் சொன்னார்.
என்றாலும் மற்ற அமைப்புக்களில் சில பாஸ் உறுப்பினர்கள் முஸ்லிம் அல்லாதார் பிரிவு குறித்து ஐயம் கொண்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
நாங்கள் பாஸ் கட்சிக்கு ஒரு சொத்து. நாங்கள் உதவ வந்துள்ளோம். மருட்டல் அல்ல. ஒன்றாக இணைந்து போராட (பொதுத் தேர்தலில்) நாங்கள் விரும்புகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.