பாஸ் தனது பாதையிலிருந்து விலகவில்லை என சுரா ( syura ) மன்றம் பிரகடனம்

புத்ராஜெயாவைக் கைப்பற்றும் ஆர்வத்தில் பாஸ் கட்சி தனது பாதையிலிருந்து விலகிச் சென்று விட்டதாக கூறப்படுவது குறித்த தனது மௌனத்தை அந்தக் கட்சியில் வலிமை வாய்ந்த உயர் நிலை அதிகாரத்தைக் கொண்ட சுரா ( syura ) மன்றம் கலைத்துள்ளது.

பாஸ் கட்சி தனது போராட்டத்துக்கு இன்னும் உண்மையாக இருப்பதாக அது அறிவித்தது.

“இன்றைய பாஸ் கட்சி முன்னைப் போலவே இருக்கிறது என்பதை பாஸ் கட்சியின் சுரா மன்றத்தில் உள்ள உலாமாக்கள் உறுதி செய்கின்றனர். அத்துடன் வலியுறுத்தவும் விரும்புகின்றனர். அதன் போராட்டம் அதனுடைய அடிப்படை நோக்கத்திலிருந்து எந்த வகையிலும் மாறவில்லை.”

“பாஸ் வலுவாகத் திகழ்கிறது. கட்சி அமைப்பு விதிகளில் கூறப்பட்டுள்ளதிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல்  கட்சி அடிப்படைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது…” என கோத்தா பாருவில் இன்று 58வது பாஸ் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட அதிகாரத்துவ அறிக்கை தெரிவித்தது.

“அல்லாஹ்-வின் கருணையுடன் இந்த நாட்டில் இஸ்லாமியப் பண்புகளையும் சட்டங்களையும் பின்பற்றும் சமூகத்தையும் ஆட்சியையும் உருவாக்குவதற்குப் பாடுபடுவது..” என கட்சியின் 5(1) பிரிவு கூறுவதற்கு ஏற்ப கட்சி சென்று கொண்டிருப்பதாகவும் அது கூறியது.

 

TAGS: