அரசாங்கத்தில் தொடர்ச்சி இருப்பதற்கு ஆதரவளிக்குமாறு நஜிப் சீனர் அமைப்புக்களுக்கு வேண்டுகோள்

அரசாங்கத்தை தேர்வு செய்வதில் தொடர்ச்சி முக்கியம் என்பதை மக்களுக்கு விளங்க வைப்பதற்கு உதவுமாறு சீனர் அமைப்புக்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அமெரிக்க மக்கள் உறுதியற்ற நிலையைக் காட்டிலும் தொடர்ச்சி முக்கியம் எனக் கருதியதால் அவர்கள் அதிபர் ஒபாமாவை மீண்டும் தேர்வு செய்தனர்,” என அவர் சொன்னார்.

நஜிப் நேற்று மலாக்காவில் பே போங் இடைநிலைப் பள்ளியில் 29வது மலேசியச் சீனர் பண்பாட்டு விழாவைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

“அடுத்த ஏழு ஆண்டுகளில் மலேசியாவை வளர்ச்சி அடைந்த நாடாகத் திகழ வேண்டும் என நாம்  விரும்புவதும் மலேசியர்களுக்குத் தெரியும் என நான் நம்புகிறேன். ஆகவே நாட்டுக்கு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர நடப்பு அரசாங்கத்துக்குப் போதுமான அவகாசம் கொடுப்பதும் முக்கியமாகும்.”

இந்த நாட்டில் இயங்கும் அரசு சாரா சீனர் அமைப்புக்கள் தீவிரவாத சிந்தனைகளை ஆதரிக்க மாட்டா என்றும் அரசாங்கம் நம்புவதாகவும் நஜிப் சொன்னார்.

பரம்பரைப் பெயர்கள், மாவட்டங்கள், கிளை மொழிகள் அல்லது வர்த்தகங்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டபல்வேறு அரசு சாரா சீனர் அமைப்புக்கள் அத்தகைய தீவிரவாதத்தை நிராகரித்ததோடு மிதவாதத்தையும் பின்பற்றி வந்துள்ளன என்றார் அவர்.

மிதவாதம் மீதான அவற்றின் நம்பிக்கை கன்பூசியஸ் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் சொன்னார்.

அது இந்த நாட்டில் வாழும் சீனர்களுடைய வாழ்க்கையிலும் சிந்தனையிலும் செல்வாக்குப் பெற்றுள்ளது  “மிதவாதம் என்பது நாம் எத்தகைய தீவிரவாதத்தையும் நிராகரிப்பதாகப் பொருள்படும். சீனர் அமைப்புக்கள் தீவிரவாதத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. மிதவாதத்தைத் தங்கள் அடிப்படை தத்துவமாக  கொண்டுள்ளதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.”

“அரசு சாரா அமைப்பு ஒன்றின் அடிப்படை எதுவாக இருந்தாலும் மலேசியாவை உயர்ந்த வருமானத்தைக் கொண்ட வெற்றி பெற்ற நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு பங்காற்ற முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

 

TAGS: