பிரதமராக ஹாடி ? தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார் அன்வார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மலேசியப் பிரதமராக வேண்டும் என்ற யோசனை மீது தமக்கு எந்தப்  பிரச்னையும் இல்லை எனப் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

“எந்தப் பிரச்னையும் இல்லை. அது ஒரு விவகாரமே அல்ல. நாம் அந்த யோசனையை விவாதிக்க முடியும்,” என அன்வார் ஷா அலாமில் யூனிவர்சிட்டி சிலாங்கூரில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறினார்.    அதற்கு முன்னதாக அப்துல் ஹாடி பக்காத்தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்க வேண்டும் என பாஸ் உலாமா பேராளர் ஹைருண் நிஸாம் மாட் ஹுசேன் தெரிவித்த யோசனை பற்றி அன்வாரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

கோத்தா பாருவில் நேற்று 58வது பாஸ் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஹைருண் நிஸாம் அந்த யோசனையைத் தெரிவித்தார்.

அந்த யோசனை குறித்து கருத்துரைத்த அப்துல் ஹாடி, இஸ்லாமிய போதனைகள் தலைமைத்துவப் பதவிகளை நாடுவதற்கு தடை விதிப்பதாகச் சொன்னார்.

“நாங்கள் அந்தப் பதவியை அதிகமான பொறுப்புக்களைக் கொண்ட பதவியாக கருதுகிறோம். புத்ராஜெயாவைக் கைப்பற்றுவது தான்  நமக்கு முதலில் முக்கியம்..”

“யார் பிரதமராக வந்தாலும் அவர் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். மக்களை ஒன்றுபடுத்தி நீதியை நிலை நாட்டுகின்றவராகவும் இருக்க வேண்டும். நாங்கள் அதனை ஒப்புக் கொள்வோம்..”

“என்றாலும் நான் மீனவராகவே இருக்க விரும்புகிறேன்,” என அப்துல் ஹாடி சொன்னார்.

கடந்த வெள்ளிக் கிழமை கோத்தா பாருவில் நிகழ்ந்த பேரணி ஒன்றில் அன்வார் பிரதமராவதற்கு டிஏபி அங்கீகாரம் அளிப்பதாக அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் பாஸ் ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார்.

ஊழலிலிருந்து நாட்டைக் காப்பாற்ற உதவுவதற்குப் மிகவும் பொருத்தமான மனிதர் அன்வார் என லிம் மேலும் சொன்னார்.

TAGS: