இஸ்லாத்தின் போதனைகளுக்கு இணங்க நியாயமாக இருக்க வேண்டுமானால் ஹுடுட் சட்டத்தை முஸ்லிம் அல்லாதாருக்கும் அமலாக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
எனவே மலேசியாவில் ஹுடுட் சட்டத்தை பாஸ் எவ்வாறு அமலாக்க விரும்புகிறது என்பதை அது விளக்க வேண்டும் என மகாதீர் சொன்னார்.
“இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது போல நியாயமாக இருக்கும் பொருட்டு முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் ஹுடுட் சட்டம் அமலாக்கப்படுமா என்பதை அறிய நான் விரும்புகிறேன்.”
“தண்டனை நியாயமாக கொடுக்கப்பட வேண்டும் எனத் திருக்குர் ஆனில் 43 வாசகங்கள் கூறுகின்றன. நியாயமற்ற நிலைமை இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது,” என மகாதீர் சொன்னதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகமான மலாய்க்காரர்கள், சமயச் சார்பற்ற நிலையைக் கடைப்பிடிக்கும் டிஏபி-யில் சேருவதை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அண்மையில் அங்கீகரித்துள்ளது குறித்து வினவப்பட்ட போது மகாதீர் அவ்வாறு பதில் அளித்தார்.
“திருட்டுக் குற்றத்துக்கு முஸ்லிம்களுக்கு கை துண்டிக்கப்படும் தண்டனை விதிக்கப்படுகின்றது. அதே வேளையில் முஸ்லிம் அல்லாதாருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனையே கொடுக்கப்படுகின்றது.”
“இது நியாயமற்றதாகக் கருதப்படுகின்றது. அத்துடன் இஸ்லாமியப் போதனைகளுக்கும் முரணானது,” என்றார் மகாதீர்.
கோத்தா கினாபாலுவில் நேற்று நிகழ்வு ஒன்றில் கொள்கை உரை நிகழ்த்திய பின்னர் மகாதீர் நிருபர்களிடம் பேசினார்.